ஒகேனக்கல் பிரச்சனையில் தான் பேசியது கன்னட மக்களைவேதனைப்படுத்தியதை அறிந்து வருத்தப்பட்டேன் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதியுள்ளார் ரஜினி.
ஒகேனக்கல் பிரச்சனை தொடர்பாக தமிழ் திரையுலகம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு பேசினார் ரஜினி. அவரது பேச்சு கன்னடர்களை புண்படுத்திவிட்டது, ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ரக்சண வேதிகே அமைப்பு போராடி வருகிறது. ரஜினி மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்த படங்களை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் கொடுத்தனர். இதனால், குசேலன் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை சரி செய்யும் நோக்கில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதினார் ரஜினி. அதில் தனது வருத்தத்தை தெரிவித்தவர், யாருடைய மனதையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல. பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதே எனது கொள்கை, குறிக்கோள் என கூறியுள்ளார். தனது படத்தை தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்கள், பிறமொழியினரும் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்ற வாரம் அனுப்பப்பட்ட இந்தக் கடிதம் ரக்சன வேதிகே அமைப்பின் ஆக்ரோஷத்தை குறைத்துள்ளதாக கூறினார், கர்நாகட திரைப்பட வர்த்தக சபையின் நிர்வாகிகளில் ஒருவரான ராக்லைன் வெங்கடேஷ்.