நேற்று மாலை சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் குசேலன் இசை வெளியீட்டு விழா. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் முதல் இசை தட்டை வெளியிட்டார்.
விழாவில் பேசிய அனைவரும் ரஜினியின் இளமையை வியந்தபிறகு கடைசியாக மைக் பிடித்தார் ரஜினி.
முதலில் குரு வணக்கம். தாய் தந்தை குரு அனைத்தும் எனக்கு பாலசந்தர்தான் என்றார் ரஜினி. பிறகு குசேலன் படத்தில் நடித்த பிளாஷ்பேக்கை அசைபோட்டார்.
இளம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இருவரின் கலவை என்று புகழ்ந்தார். இரண்டுபேர் சேர்ந்தாலே அரசியல் வரும். ஆனால் மூன்று பேர் இணைந்தும் எந்தப் பிரச்சனையுமில்லை என்று குசேலனின் மூன்று தயாரிப்பாளர்களையும் பாராட்டினார்.
இளமை ரகசியம் குறித்து சொல்லும்போது, அரிசி, சர்க்கரை, உப்பு, மாத்திரை, பால், நெய் போன்ற வெள்ளை உணவுகளை எடுப்பதில்லை, இந்தக் கட்டுப்பாடு நாற்பது வயது தாண்டியவர்களுக்கு மட்டுமே என்றார்.
இவையனைத்தையும் விட, குசேலன் சம்பளத்தில் 15 லட்சத்தை சினிமா தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளித்ததே அனைவரின் பாராட்டைப் பெற்றது. இந்த வழக்கத்தை இனிவரும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தொடர இருக்கிறார் ரஜினி.
இவரைப் பின்பற்றி குசேலன் தயாரிப்பாளர்கள் பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர்கள், தெலுங்கு தயாரிப்பாளர் அஸ்வினி தத், இயக்குனர் பி. வாசு ஆகியோரும் குசேலன் வருமானத்தில் சிறுபகுதியை தொழிலாளர்களுக்குத் தர முன்வந்துள்ளனர்.
குசேலன் என்ற பெயருக்கேற்ற செயல்!