தமிழில் சுயம்வரம் படம் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டது. இதனை பல இயக்குனர்கள் இணைந்து உருவாக்கினர். ஒரே இயக்குனர் குறைந்த கால அவகாசத்தில் எடுத்த படம் தி ஃபாஸ்டஸ்ட் ஃபார்வர்ட். ஜான்கோர் இயக்கிய இப்படம் 13 நாளில் எடுத்து முடிக்கப்பட்டது.
இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் 12 நாட்களில் ஒரு படத்தை தயாரித்து 13வது நாள் வெளியிட திட்டமிட்டுள்ளார் கன்னட தமிழர் சுரேஷ் ஜோகிம்.
இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளார் ஜோகிம். படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் நவ்யா நாயர்.
சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் பேசிய நவ்யா, சுரேஷ் ஜோகிம்மின் உதவும் உள்ளம் பார்த்து உருகிப் போனதாகவும், இனி சம்பாதிப்பதில் 25 சதவீதத்தை ஏழைகளுக்கு தர இருப்பதாகவும் கூறினார். அதோடு, சினிமாவில் சம்பாதிக்கும் நடிகைகள் இடம் வாங்கிப் போடலாமா, கல்யாண மண்டபம் கட்டலாமா, ஷாப்பிங் காம்ப்ளக்சில் முதலீடு செய்யலாமா என்றுதான் நினைக்கிறார்கள் என்றார் காட்டமாக.
நவ்யாவின் பேச்சால் நடிகைகள் மட்டுமில்லாமல் கல்யாண மண்டப நடிகர்களும் கடுப்பில் இருக்கிறார்கள். கேரளாவிலிருந்து வந்து நமக்கே கடுக்காய் தருகிறாரே என நவ்யாவுக்கு எதிராக நறநறக்கிறார்கள்.