சென்னையில் இன்று நடந்த சர்வம் சினிமா படப்பிடிப்பில் லிஃப்ட் அறுந்து விழுந்து இரண்டு பேர் பலியானார்கள்.
'சர்வம்' படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஆர்யாவும், கதாநாயகியாக த்ரிஷாவும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் 11வது மாடியில் இன்று நடந்து வந்தது. இதற்கான பொருட்களை உதவி இயக்குனர்கள், கேமிரா உதவியாளர்கள் மேலே எடுத்து சென்றனர்.
அப்போது லிஃப்ட் அறுந்து விழுந்தது. இதில் மின் தூக்கியில் இருந்த 3 பேர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த உதயகுமார் (24) என்பவர் அந்த இடத்திலேயே பலியானார்.
சிகாமணி, அப்பன்ராஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகாமணி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்பன்ராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடந்த 'அந்தோணி' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விவேக் நடித்த காமெடி காட்சியில் பொறியாளர் விரல்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு கைவிடப்பட்டது.