பழைய படங்களின் பெயரை தனது படத்துக்கு ஒருவர் பயன்படுத்தினால், பழைய படத்தின் தயாரிப்பாளர், அவர் இல்லாவிடில் அவரது வாரிசுகளிடமிருந்து அனுமதி கடிதம் பெறவேண்டும்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த புதிய விதிமுறையை காதில் போட்டுக் கொள்ளாததால் தெய்வமகன் படத்தின் பூஜையை அனைவரும் புறக்கணித்தனர். அப்படியொரு நிலைமை தனது மலைக்கள்ளன் படத்திற்கு நேரக்வடாது என்று விரும்புகிறார் ராஜ்கிரண். அதற்காக வாரிசுகளைத் தேடி அலைகிறார்.
எம்.ஜி.ஆர். அரை நூற்றாண்டிற்கும் முன்னால் நடித்து வெளிவந்த படம் மலைக்கள்ளன். இதே பெயரில் தனது ரெட்சன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு படத்தை தயாரித்து நடிக்கிறார் ராஜ்கிரண். படத்தின் கதை புதுசு என்றாலும் பெயர் ஒன்று.
மேலும், பழைய மலைக்கள்ளனில் இடம்பெற்ற, எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் பாடலையும் தனது படத்தில் பயன்படுத்துகிறார் ராஜ்கிரண். இதற்கு முறைப்படி மலைக்கள்ளன் தயாரிப்பாளரிடமும், இசையமைப்பாளரிடமும் அனுமதி பெறவேண்டும்.
ராஜ்கிரணின் துரதிர்ஷ்டம் இப்போது இருவரும் உயிருடன் இல்லை. வாரிசுகளிடம் அனுமதி பெறலாம் என்றால் அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை.
யாருக்கேனும் வாரிசுகளின் விலாசம் தெரிந்தால் ராஜ்கிரணுக்கு உதவலாம்.