இயக்குநர்கள் சங்கத்தில் மோதலின் முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன.
சங்கத் தேர்தலில் பாரதி ராஜா தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அவரது அணியை ஒருமனதாகத் தேர்வு செய்ய முட்டுக்கட்டையாக இருந்தார் இயக்குநர் ஆர்.சி.சக்தி. பாரதி ராஜாவை எதிர்த்துத் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார் ஆர்.சி.சக்தி. மேலும் இன்னொரு தலைவலியாக உதவி இயக்குநர்கள் புதிய அணி அமைத்து பாரதி ராஜாவின் அணிக்கு நெருக்கடி தந்தனர்.
இடைத் தேர்தல் அளவிற்கு அடிதடி உருவானதால் தேர்தல் ஒத்திப் போடப்பட்டது. ஜூன் எட்டு பொதுக்குழு கூடி புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றார்கள்.
சொன்னபடி ஜூன் எட்டு பொதுக்குழு கூடியது. தேர்தல் தேதியை அறிவிப்பதற்குப் பதிலாகப் பாரதிராஜா அணியை ஒருமனதாகத் தேந்தெடுப்பதாக அறிவித்தனர். பாரதி ராஜா அவசர அவசரமாகத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இந்த அவசரக்கோலம் செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஆர்.சி.சக்தி.
நான் வேட்பு மனுவை வாபஸ் பெறாதபோது எப்படி பாரதி ராஜாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கலாம் என்ற ஆர்.சி.சக்தியின் கேள்வியில் நியாயம் இருப்பதால், விளக்கம் கேட்டு நீதிமன்றம் பாரதி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ் உத்தரவு வெளியானதுமே சச்சரவுக்கான சூழல் திரளத் தொடங்கியுள்ளது இயக்குநர் சங்கத்தில்.