வாணி மஹாலில் கொடைக்கானல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. அடர்ந்த தாடியுடன் வந்த கமல் (மர்மயோகி கெட்டப்?), ஆடியோவை வெளியிட பாரதிராஜா பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் பலர் பேசினாலும், காதுகள் காத்திருந்தது கமலுக்காக. தசாவதாரம் குறித்து பத்திரிகைகளுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ பேட்டி கொடுக்கவில்லை கமல். இது அவரது குணத்திற்கு முற்றிலும் எதிரானது. தசாவதாரம் வெளியான பின் கமல் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது. கமல் கழுவுற மீனில் நழுவுற மீன்.
கலைஞனுக்கு கரகோஷம் தேவை. அதற்காக எடுத்த படம்தான் தசாவதாரம் என்றார் கமல். பிரமாண்டம் என்பது மக்கள் எடுத்துக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது. 16 வயதினிலே சின்ன பட்ஜெட் படம், அதனை மக்கள் பிரமாண்டமான படமாக்கினார்கள் என்றும் கூறினார்.
ஆஸ்கர் விருது இந்த விழாவிலும் அடிபட்டது. வெள்ளைக்காரன் இந்தியாவில் வழங்கும் விருதை மரியாதையுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய காலத்திலேயே அதனைப் பார்ப்பேன் என்றார் கரகோஷத்தின் நடுவில்.
காலம் கனியுமா, கமலின் கனவு மெய்ப்படுமா?