'பெரியார்' படத்தின் இயக்குனர் ஞான ராஜசேகரனுக்கு புதுச்சேரி அரசின் 'சங்கரதாஸ் சுவாமிகள் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இசை அமைப்பாளர் வித்யாசாகருக்கு ரஷ்ய திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசின் தகவல், விளம்பரத் துறை இயக்குனரகமும் நவதர்ஷன் திரைப்பட சங்கமும் இணைந்து திரைப்பட விழா நடத்தின. புது டெல்லியில் உள்ள திரைப்பட விழா இயக்குனரகத்தால் தேர்வு செய்யப்பட்ட படங்கள் இதில் திரையிடப்பட்டன.
அவற்றில் சிறந்த திரைப்படத்தை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட நடுவர் குழு 'பெரியார்' திரைப்படத்தை நடுவர் குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.
படத்தின் இயக்குனர் ஞான ராஜசேகரனுக்கு விருதையும் ரொக்கப் பரிசையும் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி வழங்க உள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் விழாவில் இந்த விருது வழங்கப்படும் என புதுச்சேரி அரசின் தகவல் விளம்பரத் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் சுவாஷி குடியரசுத் தலைநகர் சிபோக்சராவில் கடந்த 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடந்தது. தேச பக்தியை வளர்க்கும் வகையில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல நாடுகளில் வெளிவந்த திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன.
இதில் 'பெரியார்' திரைப்படத்தின் இசை அமைப்பாளர் வித்யா சாகருக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.