முன்பு குழந்தை நட்சத்திரம் என்று நான்கைந்து பேராவது தமிழ் சினிமாவில் இருப்பார்கள். இன்று?
குழந்தைகள் மட்டுமின்றி குழந்தைகளுக்கான திரைப்படங்களும் கோடை குளமாக வறண்டு விட்டது. தமிழில் வெளியான குழந்தைகளுக்கான திரைப்படங்களை ஒரு கை விரல்களுக்குள் அடக்கி விடலாம்.
அந்தக் குறையைச் சரிசெய்ய வரவிருக்கிறது வண்ணத்துப்பூச்சி. கமல்ஹாசனிடம் 15 வருடங்களுக்கு மேல் உதவியாளராக இருந்த அழகப்பன்.சி இயக்கியிருக்கும் படம். பெற்றோர்களின் வேலைப் பளுவிற்கு இடையில் நசுங்கிப் போகும் குழந்தையின் பால்யத்தைச் சொல்லும் இப்படத்தில் பாலசிங்கம், ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர்.
குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் பெற்றோர்கள் பாடம் கற்க வேண்டிய பல விசயங்கள் இதில் உண்டு. பிரதமர், குடியரசுத் தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்றவர்களுக்கு வண்ணத்துப்பூச்சியைத் திரையிட்டுக் காட்ட முயன்று வருகிறார் அழகப்பன் சி.
கமர்ஷியல் பாதையில் மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் அழகப்பனின் வண்ணத்துப்பூச்சி வரவேற்க வேண்டிய முயற்சி.