இயக்குநர் செல்வராகவனிடம் பல படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றியவர் ராஜேஷ்லிங்கம். இவர் முதல்முறையாக 'புகைப்படம்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள அம்ஜத், சிவம், ஹரீஷ், நந்தா என்று நான்கு கதாநாளகர்களும் புது முகங்கள். அதேபோல நாயகிகளாக நடிக்கும் மிருணாலினி, பிரியா, யாமினி ஆகியோரும் புது முகங்கள்தான்.
'கல்லூரியில் நடக்கும் காதல் கதைதான் இது என்றாலும், கொஞ்சம் வித்தியாசமான முறையில் சொல்லப் போகிறேன். கல்லூரியில் படித்து வேலை தேடிக்கொண்ட பிறகுதான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தொடங்குவதாக நினைக்கிறார்கள். ஆனால், கல்லூரியில் சேரும்போதே வாழ்க்கை துவங்கி விடுகிறது என்பதைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் சொல்லவிருக்கிறேன்.' என்கிறார் படத்தின் இயக்குநர்.
இப்படத்தின் இசையைக் கங்கை அமரன் அமைக்கவிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் இன்றையை இளைய இசையமைப்பாளர்களுடன் போட்டிபோட இருக்கிறார். எனவே இப்போதுள்ள இசையைப்போல பாடல்வரிகளை இசைக்கருவிகள் தின்பதுபோல இல்லாமல் அழகான மெலடி மெட்டுக்களைக் கொடுப்பார் என்று நம்புவோம்.
இப்படத்தின் பாடல்களை நா.முத்துகுமார் எழுத, ஆம்ஸ்ட்ராங் ராகவன் ஒளிப்பதிவு செய்கிறார். மாயாபஜார் சினிமாஸ் சார்பாக என்.சி.மணிகண்டன் தயாரிக்கிறார். 'புகைப்படம்' என்றால் இன்னொரு ஆட்டோ கிராஃப்பா தெரியவில்லை பார்ப்போம்.