நடிகர் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்கக் கோரும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
படத்தில் ஓம், பிரணவ மந்திரம், பகவத் கீதை ஆகியவற்றின் மீது கால் வைப்பது போன்ற காட்சிகள் உள்ளன என்று மனுதாரர் கூறியிருப்பது கற்பனையானது என்றும் நீதிமன்றம் கூறியது.
சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ராக்ஷன கோவிந்த ராமானுஜ தசா என்பவர், நடிகர் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளதால், அப்படத்தைத் திரையிடத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தசாவதாரம் படத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் மோதல் ஏற்படுவது போல அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகும். சர்ச்சைக்குரிய இந்தக் காட்சிகளை நீக்கிவிட்டுத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குமாறு தணிக்கைக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என்றும், தசாவதாரம் என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெங்கட்ராமன், சத்திய நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. தணிக்கை குழு சார்பிலும், படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பதில் மனுக்களில், "12ஆம் நூற்றாண்டில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களைக் பின்னணியாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லாத நிலையில், கற்பனையான குற்றச்சாற்றுகளை மனுதாரர் கூறியுள்ளார். இப்படத்தைப் பார்த்த பிறகே தணிக்கைக் குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. மேலும் தலைப்பிற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது" என்று கூறியிருந்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் படத்தை எதிர்க்கும் மனுவை இன்று நிராகரித்தனர்.