கடவுளை விரைவில் கண்ணில் காட்டுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதற்குள் எத்தனை பேர் கண்ணில் விரல் விட்டு ஆட்டுவார்? பாலாவை குறித்த இந்த மர்ம கேள்வி சத்தமில்லாமல் கோடம்பாக்கத்தில் இதழ் விரித்திருக்கிறது.
நான் கடவுளை பிரமிட் சாய்மீராவுக்காக ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்து வருகிறார் பாலா. ஃபர்ஸ்ட் காப்பி என்பது படத்தின் மொத்த பட்ஜெட்டை - அவரது சம்பளம் உட்பட - பாலா கூறிவிட வேண்டும். அந்த பட்ஜெட்டுக்குள் படமெடுத்து பிரமிட் சாய்மீரா கையில் தந்துவிட வேண்டும். பட்ஜெட்டை இறுக்கிப் பிடித்து லாபம் பார்ப்பதெல்லாம் இயக்குனரின் சாமர்த்தியம்.
நான் கடவுள் விஷயத்தில் பாலா சொன்ன பட்ஜெட்டுக்குள் படம் நிற்கவில்லை. இதனால் பாலாவே கையிலிருந்து மூன்று கோடி போட்டுள்ளார். இந்த மூன்று கோடிக்கு பிரமிட் சாய்மீரா பொறுப்பல்ல. பட்ஜெட்டை மீறி செலவு செய்தது பாலாவின் தவறு.
ஆனால், பாலா மூன்று கோடியை சும்மா விடுவாரா? அஜித்தை ஆட்டம் காண வைத்தவர், சாய்மீராவை சதாய்க்கமாட்டார் என்று என்ன நிச்சயம்?
பிதாமகன் 11 கோடிக்கு விற்பனையானது. நான் கடவுள் அதை ஓவர்டேக் செய்யும். படத்தை தானே ஏரியா வாரியாக விலை பேசிவிட்டு, பிரமிட் சாய்மீராவுக்கு அவர்கள் பணத்தை திருப்பித் தந்துவிடுவார் என்கிறார்கள். இப்படி செய்தால் பாலாவுக்கு மூன்று கோடியுடன் பலகோடி லாபமும் கிடைக்கும். ஆனால், பணம் போட்ட பிரமிட் சாய்மீரா சும்மா இருக்குமா?
படம் முடிந்தாலும் சண்டைக் காட்சி தொடரும் என்கிறார்கள்.