மாதவன், சிவகுமார், பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சகிதம் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் நடிகர் சூர்யா.
வழக்கமான நடிப்பு சம்பந்தமான சந்திப்பு அல்ல இது. படிப்பு சம்பந்தமான சந்திப்பு.
பாதியில் பள்ளிப் படிப்பை துறக்கும் மாணவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தனது அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் ஹீரோவா ஜீரோவா என்ற குறும்பத்தை தயாரித்துள்ளார் சூர்யா. விஜய், மாதவன், சூர்யா, ஜோதிகா இதில் நடித்துள்ளனர்.
சந்திப்பின்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வர் இந்த குறும்பத்தின் மீது ஆர்வமாக இருப்பதாகவும், சாத்தியமுள்ள அனைத்து இடங்களிலும் திரையிட்டு, குறும்பத்தை அனைவரிடத்திலும் எடுத்துச் செல்வோம் என நம்பிக்கையளித்தார்.
சிவகுமார் 28 வருடங்களாக தனது பெயரில் இயங்கும் அறக்கட்டளை மூலம் படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இனி அகரம் ஃபவுண்டேஷனுடன் தனது அறக்கட்டளை சேர்ந்து இயங்கும் என்று தெரிவித்தார்.
இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் இந்த குறும்படம் திரையிடப்படும். படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி. ஆனந்த், இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டிங் செய்த ஸ்ரீகர் பிரசாத், இயக்கிய பிரியா உள்பட யாரும் சம்பளம் வாங்கவில்லையாம். இலவசமாகவே பணிபுரிந்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய நல்ல விஷயம்!