இயக்குனர்கள் பி. வாசு, ப்ரியதர்ஷன் இடையிலான ஈகோ போர் இப்போதைக்கு முடிவடையாது. முடிவடையாதது மட்டுமல்ல, போர் அதன் உச்சத்தை தொடும் போல் உள்ளது.
இந்த ஈகோ யுத்தம் சந்திரமுகியில் தொடங்கியது. மணிசித்ரதாழ் படத்தின் தமிழ் ரீ-மேக் சந்திரமுகி. பி. வாசு இதனை இயக்கிக் கொண்டிருந்தபோது, மணிசித்ரதாழின் இந்தி உரிமையை வாங்கி இந்தியில் பூல் புலையா என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் ப்ரியதர்ஷன். இது வாசுவுக்கு பிடிக்கவில்லை. தனது சந்திரமுகியை ப்ரியதர்ஷன் காப்பி அடித்துவிட்டதாக குற்றம் சாட்டினார். வழக்கு வரை சென்றது இந்தப் பிரச்சனை.
இப்போது கதபறயும் போள் படத்தை குசேலனாக எடுத்து வருகிறார் பி. வாசு. அதே கதையை பில்லு பார்பர் என்ற பெயரில் இந்தியில் எடுத்து வருகிறார் ப்ரியதர்ஷன். குசேலன் படத்தின் காட்சிகளை பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதியில் படமாக்க திட்டமிட்டிருந்தார் வாசு. இப்போது அதே பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த ப்ரியதர்ஷனும் பொள்ளாச்சி வருகிறார்.
இருவரும் பொள்ளாச்சியில் சந்தித்தால், பத்திரிக்கைகளின் தலைப்பு செய்திக்கு ஏதேனும் தீனி கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.