தினமொரு வில்லன்கள் தமிழ் சினிமாவில் முனைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இயக்குனராக இருந்து வில்லன் அவதாரம் எடுப்பவர்களே அதிகம்.
இளம் இயக்குனர்களில் உன்னை சரணடைந்தேன் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து திருமலை, சுள்ளான், ஆதி படங்களை இயக்கிய ரமணாவும் வில்லனாகிறார்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் புதிய படமொன்றை இயக்குகிறார். அந்தப் படத்தில் ரமணாதான் வில்லன். சுள்ளான் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர், பதினாறு டேக்குகள் வாங்கி, இனி கேமரா முன்னால் வரவே மாட்டேன் என சபதம் செய்தார். எஸ்.ஏ.சி. அவரது சபதத்தை உடைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கும் மாஸ்கோவின் காவிரி படத்தில் இயக்குனர் சரவண சுப்பையா வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார்.
ரசிகர்களுக்கு இவர்கள் புதுவில்லன்கள் என்றாலும் சில தயாரிப்பாளர்களுக்கு இவர்கள் பழைய வில்லன்கள்தான்!