எல்லாவற்றையும் போல இரண்டரை மணிநேரப் படம்தான் நான் கடவுள். ஆனால், இயக்குவது பாலா என்பதால் வருடக்கணக்கில் உருண்டோடியது படப்பிடிப்பு.
காசியில் தொடங்கி தேனியில் முடித்திருக்கிறார் நான் கடவுளை. ஆர்யா, பூஜா, கவிஞர் விக்ரமாதித்யன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு வசனம் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன். இசை இளையராஜா, சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சிவா.
பாக்கி போர்ஷன் முடிவிற்கு வந்துள்ளதால், இரண்டு வருடமாகத் தொடர்ந்து வந்த ஆர்யாவின் 'முடி' வளர்ப்பும் முடிவிற்கு வந்துள்ளது. தாடி, தலைமுடி எடுத்ததைக் கிடா வெட்டித் தடபுடலாகக் கொண்டாடினார் ஆர்யா. பாவம் எத்தனை நாள் வேண்டுதலோ!
'உள்ளம் கேட்குமே' கெட்டப்பில் தாடி மீசையின்றி ஸ்மார்ட்டாக இருக்கும் ஆர்யா, இதே கெட்டப்பில் விஷ்ணு வர்த்தனின் சர்வம் படத்தில் நடிக்கிறார்.
போஸ்ட் புரொடக்ஷன் முடிந்து நான் கடவுள் திரைக்கு வர இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள் பாலாவின் வேகத்தை அறிந்தவர்கள்.