வருகிற 11 ஆம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல். தலைவர் பதவியில் போட்டியிட ஆர்.சி.சக்தி மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
பாரதிராஜாவைத் தலைவராக்கிப் பார்க்க ஆசைப்படும் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் சில இயக்குநர்கள், சக்தியின் மனுத் தாக்கலால் தங்கள் எண்ணம் நிறைவேறாதோ என்ற சிந்தனையில் உள்ளனர்.
ஆர்.சி.சக்தி இயக்குநர் சங்கத் தலைவராக மூன்று முறை இருந்தவர். இடையில் இவர் போட்டியில் இருந்து விலகிக்கொண்ட போதுதான் பாரதிராஜா ஒரு முறையும், பாலச்சந்தர் ஒரு முறையும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தமுறை தன்னால் போட்டியில் இருந்து விலக முடியாது என்ற தீர்மானத்தில் இருக்கும் சக்தியிடம் நேரில் சென்று சமாதானம் பேசிய புள்ளிகளுக்கும் தோல்வியே மிஞ்சியுள்ளது.
இதைத்தாண்டி தொலைபேசியிலும், மறைமுகமாகவும் ஆர்.சி.சக்தி மிரட்டப்படுவதாகவும் செய்திகள் கசிகின்றன. எது எப்படி இருந்தாலும் களத்தில் இருந்து பின்வாங்குவது இல்லை என்ற தீர்மானத்தில் இருக்கிறார் இயக்குநர் ஆர்.சி.சக்தி.