சினிமாவில் 'நாயகன்' என்பதைவிட வெளியே உண்மையில் நாயகன் என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி வருகிறார் ஜே.கே. ரித்தீஷ்.
அவர் முதலில் நடித்த 'கானல் நீர்' படத்துக்கான பட்ஜெட்டை விட விளம்பரத்துக்கான செலவு அதிகமாக செய்துள்ளார். சினிமாவில் நடித்து பிரபலமாவதைவிட பல்வேறு விழாக்களில் கலந்துகொள்வதிலும், உதவிகள் செய்வதிலும் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறார்.
இவர் தற்போது நடித்துவரும் 'நாயகன்' படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் சிறப்பான முறையில் நடைபெற்றது. முதல் நாள் காலையிலிருந்தே அவரின் ரசிகர்கள் தலைமை மன்றம் சார்பாக ஆங்காங்கே பேனர்கள் வைக்கத் தொடங்கி, அமர்க்களப்படுத்தி இருந்தார்கள்.
இவ்விழாவில், பாடல் கேசட்டை கலைஞர் மனைவி ராஜாத்தி அம்மாள் வெளியிட, அமைச்சர் சுப. தங்கவேலன் பெற்றுக்கொண்டார்.
மேலும் இவ்விழாவில் அமைச்சர்கள் பெரியசாமி, பரிதி இளம்வழுதி, ஃபிலிம் சேம்பர் தலைவர் ஜே.ஆர்.ஜி., தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன் மற்றும் இயக்குனர்கள் சீமான், விநியோகஸ்தர்கள் தலைவரும், இயக்குனருமான கலைப்புலி ஜி. சேகரன், ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டிப் பேசினார்கள். விழா முடிவில் ஜே.கே. ரித்தீஷ் நன்றி கூறினார்.