Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்யஜித் ரே நினைவு தினம் அனுசரிப்பு!

சத்யஜித் ரே நினைவு தினம் அனுசரிப்பு!
, புதன், 23 ஏப்ரல் 2008 (18:37 IST)
வங்காள மொழி திரைப்பட இயக்குனரும், திரையுலக மேதை என்று அறியப்பட்டவருமான சத்யஜித் ரேயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

webdunia photoFILE
1992 ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் அவரது உயிர் பிரிந்தது. பதேர் பாஞ்சாலி, சாருலதா, அபுர் சன்சார், அபராஜிதோ உள்ளிட்ட மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கிய இவர் உலக சினிமாவின் மகத்தான அம்சங்களை இந்திய சினிமாவிற்கு கற்றுக் கொடுத்தவர் என்றால் மிகையாகாது.

வங்காள மொழியில் இயக்கியிருந்தாலும், அவரது திரைப்படத்தில் வரும் மனிதர்கள் தூலமானவர்கள். இந்தியா முழுவதையும் பிரதிபலிக்கும் மனோ நிலையை அவரது கதாபாத்திரங்கள் பிரதிபலித்துள்ளன.

அவர் மறைந்து இன்று 16 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், கலை சார்ந்த, அடிப்படையான மனித இயல்புகள் சார்ந்த விஷயங்களை திரைச் சலனங்களில் படம்பிடித்துக் காட்டுவதில் தரமான இயக்குனர்களுக்கு இன்றும் அவர் வழிகாட்டியாகவே இருந்து வருகிறார்.

சாருலதா என்ற திரைப்படத்தில், பெண்ணின் தனிமையை எடுத்துரைக்கும் ஒரு அபாரமான காட்சியில், பைனாகுலர் மூலம் அந்த பெண் மாடியிலிருந்து அனைத்தையும் பார்ப்பார், அப்போது அவரது கணவர் வருவார் கணவரையும் அந்த பைனாகுலர் வழியாகவே பார்ப்பார்.

webdunia
webdunia photoFILE
எந்த ஒரு ஆவேச வசனமும் இல்லாத இந்த அற்புதமான காட்சி பெண் சமுதாயத்தின் நிலையை, தனிமையை அப்படியே தத்ரூபமாக காட்டியது. இந்த படம் வெளிவந்த போது விமர்சகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்: ஒரு பெண் வாசலுக்கு வந்து கதவைத் திறப்பதை 15 நிமிடம் காட்டவேண்டுமா என்றார். அதற்கு சத்யஜித் ரே பதில் கூறுகையில், ஒரு பெண் வாசலுக்கு வரும் ஒரு 15 நிமிடத்தை உங்களால் பொறுக்கமுடியவில்லை எனில், இவ்வளவு ஆண்டுகாலமாக வெளியே வராமலேயே இருக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்குக் ஒன்றுமே தெரியவில்லையா? என்றார்.

கறுப்பு வெள்ளை காலக் கட்டத்திலேயே கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள நெருக்கமின்மையை பைனாகுலர் காட்சி மூலம் சூட்சமமாக வெளிப்படுத்தியவர் இவ்வாறுதான் பதிலளிப்பார்.

கிராமிய வாழ்வின் சோகம் கலந்த ஒரு இனிமை இவரது படங்களில் வெளிப்பட்டுள்ளன. தூரத்து இடிமுழக்கம் (இது தமிழில் வந்த தூரத்து இடி முழக்கம் அல்ல) என்ற படத்தில் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் இந்தியாவை தாக்கும் அச்சுறுத்தல் இருந்தபோது ஒரு கிராமம் எவ்வாறு தனது பிழைப்பிற்கு கஷ்டப்பட்டது என்றும் அப்போது வறுமையிலும் அந்த மனிதர்கள் எவ்வாறு செம்மையாக வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டியுள்ளார்.

எந்த துன்பமான காலக் கட்டத்திலும் மனித உறவுகள் கைகோர்த்தால் துன்பத்தை வெல்லலாம் என்று இந்த படத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார் ரே.

"இவரது படங்களை காணத் தவறியவர்கள், சூரியனையும், சந்திரனையும் காணாத ஒரு உலகத்தில் வாழ்வதாகவே பொருள்" என்று ஜப்பானிய இயக்குனர் மேதை அகிரா குரொசாவா கூறியது இன்றைய தினத்தில் நினைவு கூறத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil