மிகப்பெரிய கார்பரேட் கம்பெனியான 'பிரமிட் சாய்மீரா' நிறுவனம் நலிந்த பத்துப் பட நிறுவனங்களைக் கைதூக்கி விடும் வகையில் விழாவோடு பத்து இயக்குநர்களை அறிமுகம் செய்தது. இதில் ஏழு பட நிறுவனங்கள் வேலையைத் துவங்கிவிட்டன. இன்னும் மூன்று நிறுவனங்களுக்கு இயக்குநர் அறிவிக்கப்படவில்லை.
அப்படிப் படப்பிடிப்புக்குப் போன இயக்குநர்களில் ஒருவர் ஜேப்பி அழகர். இவர் ஏற்கெனவே கேப்டன் சினி கிரியேஷன்ஸ் பேனரில் விஜயகாந்தை வைத்து 'சுதேசி' என்ற படத்தை இயக்கியவர்.
தற்போது தெய்வானை மூவீஸ் நிறுவனத்திற்காக 'முருகா' படத்தில் நடித்த அசோக்கை ஹீரோவாக வைத்து இயக்கிவருகிறார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிடம் மொத்த பாடல்களையும் டம்மி வாஸ்சில் பதிவு செய்துகொண்டு படப்பிடிப்பிற்குச் சென்றுள்ளார்.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஒரே ஷெட்யூலில் முழுப் படப்பிடிப்பையும் முடித்துக்கொண்டு வரும் ஜூன் முதல் வாரத்தில்தான் திரும்புகிறார்கள். இதற்காக மொத்த படக்குழுவினரும் காரைக்குடியில் டேரா போட்டுள்ளனர்.