மிஷ்கினின் அடுத்த படம் நந்தலாலா. ஒரு நடுத்தர வயது இளைஞன். ஒரு அறுவயதுச் சிறுவன். இருவரும் தங்களின் அம்மாக்களைத் தேடிச் செல்கிறார்கள். வழியில் அவர்கள் சந்திக்கும் நபர்கள், நிகழ்வுகள்தான் நந்தலாலாவின் கதை.
மிஷ்கினின் இந்தக் கதை ஜப்பான் திரைப்படம் ஒன்றில் இருந்து உருவப்பட்டது என்று பலமான பேச்சு.
ஜப்பானின் புகழ்பெற்ற சமகால இயக்குநர் டகிஷி கிட்டானோ. இவர் 1999 இல் இயக்கிய படம் கிக்குஜிரோ. இந்தப் படத்தில் சிறுவன் ஒருவனும், நடுத்தர வயது மனிதன் ஒருவரும் தங்கள் தாய்களைத் தேடிப் புறப்படுவார்கள். அவர்கள் வழியில் சந்திக்கும் மனிதர்களும் நிகழ்வுகளும்தான் கதை.
இதில் நடுத்தர வயது மனிதனாக டகிஷி கிட்டானோவே நடித்திருந்தார். பாம் டி ஓர் விருதுக்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டதுடன் நான்கு சர்வதேச விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தழுவல் தவறில்லை. அதை மறைப்பதுதான் தவறு. மிஷ்கின் தவறு செய்ய மாட்டார் என்று நம்புவோம்!