இந்துக்களை அவமதித்ததாக புகார் எழுந்ததை அடுத்து நடிகர் சரவணனின் 'வணக்கம்மா' படத்தின் பூஜைக்குக் காவல் துறையினர் தடை விதித்தனர்.
இயக்குநர் ஹரிராம் இயக்கும் படம் 'வணக்கம்மா'. இந்தப் படத்தில் அழைப்பிதழில் ராமனும் ஹனுமானும் ஒன்னுக்குப் போவதுபோல புகைப்படம் அச்சிட்டுப் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் சரவணன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மதன்பாப், தியாகு, விஷ்ணுப் பிரியன் ஆகியோர் நடிக்கின்றனர். சுவாதி என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் துவக்கவிழா பூஜை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இன்று காலை நடப்பதாக இருந்தது. இதை முன்னிட்டு ஏராளமான சினிமா பிரபலங்கள் அங்கு குவிந்தனர்.
இவ்விழாவைக் கண்டித்து இந்து முன்னணியினரும் அங்கு திரண்டனர். இந்துக்களை அவமதிக்கும் வகையில் அழைப்பிதழ் அச்சடித்த 'வணக்கம்மா' படக்குழுவினரைக் கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் பட பூஜைக்குத் தடை விதித்தனர். இதையடுத்து விழா ரத்து செய்யப்பட்டது.
படத்திற்காக அச்சிடப்பட்டிருந்த சுவரொட்டிகள், அழைப்பிதழ்கள் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளும் கிழிக்கப்பட்டன.