பெரிய அரசியல் தலைவர்களின் வாழ்க்கையைத் திரையில் கொண்டு வருவது பேஷனாகி வருகிறது.
காமராஜரின் வாழ்க்கையைச் சொல்லும் 'காமராஜர்' திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே படத்தை ஆங்கிலத்திலும் வெளியிட்டனர்.
'பாரதி' படத்தை இயக்கிய ஞானராஜசேகரனின் 'பெரியார்' திரைப்படம் தமிழ்ச் சூழலில் ஏற்படுத்திய பாதிப்பை அனைவரும் அறிவர்.
தேசியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறை 'பசும்பொன் தேவர் வரலாறு' என்ற பெயரில் படமாக எடுத்தனர். அப்படம் இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
திரைப்படமாக எடுக்கத் தகுதி வாய்ந்த இன்னொரு தலைவர் அண்ணா. 'கலை உலகத்தில் அண்ணா' என்ற பெயரில் அவரையும் செல்லுலாய்டில் கொண்டு வருகிறார்கள்.
இந்தப் படத்தை இயக்குகிறவர் 'தீண்ட தீண்ட' படத்தை இயக்கிய ஏ.பி.முருகன். அரசியல், கலை என்ற இரு முகங்கள் கொண்ட அண்ணாவின் கலையுலக அனுபவத்தைச் சொல்லும் படமாக இது இருக்குமாம்.