இப்படியொரு விழா சமீபத்தில் நடந்ததே இல்லை. அத்தனை ஒழுங்கு, கச்சிதம். இப்படி மதுமிதாவின் வல்லமை தாராயோ ஆடியோ விழாவைப் புகழாதவர்கள் யாருமில்லை. மேடையிலேயே புகழ்ந்து தள்ளினார்கள் ராம.நாராயணனும், கே.எஸ்.ரவிக்குமாரும்.
பரத்வாஜ் இசையமைத்த வல்லமை தாராயோவின் ஆடியோவை அவரே வெளியிட பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் பெற்றுக்கொண்டார். விழாவில் மூத்த கலைஞர்கள் எம்.என்.ராஜம், சத்யப்ரியா, வெண்ணிற ஆடை நிர்மலா, மஞ்சுளா, நடிகர்கள் பி.எல்.ராகவன், ரவிச்சந்திரன், வீராச்சாமி, விஜயகுமார், ஸ்ரீகாந்த், பத்திரிகையாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பார்வையாளர்களை இது பனியாக ஜில்லிட வைத்தது என்றால், பார்த்திபனின் புறக்கணிப்பு அனைவரையும் நெருப்பாகச் சுட்டது.
ஆடியோ விழாவை புறக்கணித்த வல்லமை தாராயோ நாயகன் பார்த்திபன் பத்திரிகையாளர்களிடம் பொரிந்து தள்ளினார். ஆடியோ அழைப்பிதழில் என்னுடைய பெயரைப் போடவுமில்லை. உரிய முறையில் அழைக்கவுமில்லை. என்னை அவமானப்படுத்தி விட்டனர் என்று கொதித்தவர், படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று தனது நல்ல மனதையும் வெளிப்படுத்தினார்.
அந்த வாழ்த்திலும் நூறு டிகிரி வெப்பம் தகித்ததைச் சொல்லியே ஆக வேண்டும்.