ஆக்ஷன் சொன்ன அடுத்த கணமே பேக்கப் ஆனது படிக்காதவன் படப்பிடிப்பு.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட், விஜயா புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களில் இருந்தும் படம் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தார் தனுஷ். 'பொல்லாதவன்' குரூப் கம்பெனி கதிரேசனும் தனுஷூக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.
யாருக்கு முதலில் நடித்துக் கொடுப்பது என்பதில் பிரச்சனையாகி, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து நடந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டிற்கு முதலில் நடித்துக் கொடுப்பது என்று முடிவானது.
இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன் தயாரிக்கும் 'படிக்காதவன்' படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொண்டார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவிற்கு மாறாக தனுஷ் நடந்து கொண்டதால், தொழிலாளர் அமைப்பான பெப்சி படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்தது. இதனால், படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த கூட்டத்தில், "பல லட்சம் ரூபாய் செலவில் அரங்கு அமைத்துள்ளோம். படப்பிடிப்பை ரத்து செய்தால் பெரும் இழப்பாகி விடும்" என விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்தது. முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்த பின்பு இந்தப் பிரச்சனை மீண்டும் பஞ்சாயத்திற்கு வருகிறது.