தமிழ் திரையுலகில் கட்டுமஸ்தான உடம்பு வைத்திருக்கும் சிலரில் ஷாமும் ஒருவர்.
ஜனநாதனின் 'இயற்கை', ஜீவாவின் 'உள்ளம் கேட்குமே' படங்களில் ஷாமின் நடிப்பு, செம்பு கலக்காத தங்கம். நன்றாக நடனம் ஆடுகிறார், சண்டை இடுகிறார், ஆனால் சினிமா கேரியர் மட்டும் ஸ்டார்ட் ஆகாத என்ஜினாக தடதடத்துக் கொண்டிருக்கிறது.
ஷாம் நடித்து வெளிவந்த 'இன்பா' வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. கைவசம் இருப்பது 'அந்தோணியார்?, சிவமயம், என இரண்டு படங்களே.
இதனால் பிற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர் ஷாம். கன்னடத்தில் இயக்குனர் கணேஷ் இயக்கத்தில் நடிக்க ஷாமிற்கு வாய்ப்பு வந்தது. இங்கேயும் தொடர்ந்தது ஷாமின் துரதிர்ஷ்டம்.
ஒகேனக்கல் பிரச்சனையால் கர்நாடகாவில் கால் வைக்கவே முடியாத நிலை. கன்னட வெறியர்கள் உருட்டுக்கட்டையுடன் ஊர் எல்லையில் நிற்கிறார்கள். இந்த நிலைமையில் கன்னடப் படத்தில் நடிப்பது எல்லாம் கானல் நீர்தான்.
ஷாமின் அதிர்ஷ்டம் மீண்டும் ஒருமுறை அவருக்கு கதவடைத்திருக்கிறது.