''சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகர்களுக்கு அவர்கள் நடிக்கும் படத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம்'' என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி. அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தமிழ் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களை தாக்கும் கன்னட வெறியர்களை கண்டித்து திரையுலகத்தினர் ஏப்ரல் 4ஆம் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி., நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதா ரவி, தயாரிப்பாளர்கள் சிவ சக்தி பாண்டியன் ஆகியோர் இன்று காலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.
பின்னர் வெளியே வந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி. செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடகத்தில் தமிழ் படங்கள் ஓடும் தியேட்டர்களை தாக்கி கன்னட வெறியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் திரையுலகத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி இதற்கு எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம்.
சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரியுள்ளோம். இன்று மாலைக்குள் முறைப்படி அனுமதியை வழங்குவதாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரதத்தில் திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பெரிய நடிகர்களை வெளிப்படையாக அழைத்துள்ளோம். மற்ற நடிகர்கள் பத்திரிகைகள் மூலம் இப்போராட்டம் பற்றி தெரிந்திருப்பார்கள் என்று நம்புகிறோம் என்று கே.ஆர்.ஜி. கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் கே.ஆர்.ஜி.யிடம், ரஜினிகாந்த், கர்நாடக நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்காவிட்டால் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர், கலந்து கொள்ளாத நடிகர்களுக்கு திரையுலகம் எந்த ஒத்துழைப்பையும் அளிக்காது என்றார்.