Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒகேனக்கல் உண்ணாவிரதம் : கலந்துகொள்வாரா ரஜினி?

ஒகேனக்கல் உண்ணாவிரதம் : கலந்துகொள்வாரா ரஜினி?
, வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:05 IST)
தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து ர‌க்சன வேதிகா போன்ற கன்னட அமைப்புகள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. தமிழ்ப் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. முன்னாள் எம்.எல்.ஏ. வாட்டாள் நாகராஜும் அவரது ஆதரவாளர்களும் பெங்களூருவில் தமிழக முதல்வல் கருணாநிதி மற்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் உருவப் பொம்மைகளை எரித்தனர். அல்சூர் தமிழ்ச் சங்க அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடிய கன்னட அமைப்பினருக்கு காவல்துறை பாதுகாப்பளித்தது.

இந்த அக்கிரமங்களின் ஆவேச எதிர்வினையை நேற்று சென்னையில் கேட்க முடிந்தது. தமிழக அனைத்து திரைப்பட சங்கங்களின் கூட்டம் முடிந்தபின், சத்யராஜிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்தவர், வரும் 4 ஆம் தேதி நடக்கும் உண்ணாவிரதத்துக்கு தமிழில் நடிக்கும் கன்னட நடிகர்கள் கலந்துகெள்ள வேண்டும். தமிழில் நடித்துக்கொண்டே தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஆப்பு வைக்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம் என்றார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழக தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்துச் சங்கங்கள்களின் அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. கே.ஆர்.ஜி., ராம. நாராயணன், சரத்குமார், சத்யராஜ், அன்பாலயா பிரபாகரன், காஜாமைதீன், விஜயகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் கன்னட வெறியர்கள் தமிழ் திரைப்படங்களுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு விரோதமாகவும் நடத்திய வன்முறைக்கு எதிர்வினையாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது, வரும் 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.

இதில் அனைத்து தமிழ் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பிறப்பாலும், மொழியாலும் கன்னடர்களாக இருக்கும் தமிழ் நடிகர்கள்.

உண்ணாவிரதம் நடைபெறும் அன்று உள்நாடு, வெளிநாடு அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும்.

உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளாதவர்கள் தமிழ்ப் படங்களில் நடிக்க தடை கொண்டுவரப்படும்.

காவிரி பிரச்சனையில் திரையுலகமே திரண்டு நெய்வேலியில் போராட்டம் நடத்தியது. ரஜினி இதில் கலந்துகொள்ளாமல் தனியாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து போராட்டத்தை பிசுபிசுக்க வைத்தார். 4 ஆம் தேதி நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் கலந்துகொள்வாரா என்பது கேள்விக்குறி. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், யார் கலந்து கொள்ளவில்லை என்றாலும் நடவடிக்கை உறுதி என்றார்.

தமிழ்நாட்டில் சோறு சாப்பிடும் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும், வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று சொல்பவர்கள் அங்கேயே இருக்கட்டும், தமிழ்நாட்டுக்கு வரவேண்டாம் என்றார் சத்யராஜ்.

கன்னட திரைத் துறையினரும் ஒகேனக்கல்லுக்காக வரிந்துகட்டுகின்றனர். கர்நாடக சினிமா வர்த்தக சபை தலைவர் தல்லம் எஸ். நஞ்சுண்ட ஷெட்டி, கன்னட சினிமாத்துறை எப்போது வேண்டுமானாலும் போராட்டத்தில் குதிக்கும் என பூச்சாண்டி காட்டியிருக்கிறார்.

வரும் 4 ஆம் தேதி தமிழ்த் திரைத்துறைக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே முக்கியமான நாள்.

Share this Story:

Follow Webdunia tamil