சிம்மாசனத்தில் விஜய், சுற்றிவர வி.ஐ.பி.கள், ஓயாத புகைப்படக்காரர்களின் பிளாஷ்கள்! இருப்பது இந்திரலோகமா இல்லை ஹோட்டல் தாஜ் கொரமண்டலா? பிரமிக்க வைப்பதாக இருந்தது சென்னையில் நடந்த பிரீமியர் லீக்கின் விளம்பர தூதர்களை அறிமுகப்படுத்தும் விழா.
இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய பிரிமியர் லீக் என்ற அமைப்பை உருவாக்கி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறது. மொத்தம் எட்டு அணிகள். உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் எட்டு அணிகளிலும் இடம்பெறுகிறார்கள்.
சென்னை கிங்ஸ் அணிக்கு இந்திய கேப்டன் தோனியை ஆறு கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது இந்தியா சிமெண்ட்ஸ். முரளிதரன், ஜேக்கப் ஓரம், ஹெய்டன், ·பிளமிங் என சர்வதேச வீரர்களும் சென்னை கிங்ஸில் உண்டு. ஆளுக்கு தகுந்தபடி ஏலத்தொகை லட்சத்திலிருந்து கோடி வரை கொட்டி கொடுத்துள்ளது இந்தியா சிமெண்ட்ஸ்.
போட்ட காசை எடுக்க ஆறரை கோடி தமிழனும் போட்டியை பாரர்த்தாக வேண்டும். அதற்கு ஒரே வழி நடிகர்கள்!
சென்னை கிங்ஸின் விளம்பர நட்சத்திர தூதர்களாக விஜயும், நயன்தாராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தாஜ் கொரமண்டலில் இதற்கான விழா நடந்தது.
மைக்கைப் பார்த்தாரே பேச்சை சுருக்கும் விஜய், கிரிக்கெட்டுக்கும் தனக்குமான உறவை விரிவாகவே விளக்கினார். பேச்சின் சாராம்சம், போட்டியை எல்லோரும் பார்க்க வேண்டும், சென்னை கிங்ஸ¤க்கு ஆதரவு தரவேண்டும்!
ஏப்ரல் 23 சென்னையில் நடக்கும் போட்டியில் விஜய் கலந்துகொள்கிறார். போட்டி முடியும் வரை விதவிதமான விழாக்களில் விதவிதமான பேச்சுகளுடன் விஜய் கலந்துகொண்டு போட்டியைப் பார்க்க, பொதுமக்களை உசுப்பேற்றுவார். தூதர் என்றால் சும்மாவா!
பெயர்தான் சென்னை கிங்ஸ். ஆடுகிறவர்களெல்லாம் அண்டை மாநிலத்தவர்களும், அயல்நாட்டவர்களும். வியாபாரத்துக்கு மட்டுமே உள்ளூர் விஜய்.
ஸ்கோர் கேட்க நாமும் தயாராவோம்!