சோனியா படத்துக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாறை சோனியா சோனியா என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்தார் தாகூர் தினேஷ் குமார். சென்ற வருடமே படப்பிடிப்பு முடிந்து படம் சென்சாருக்குப் போனது.
குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்த சென்சார், கூடவே நிபந்தனை ஒன்றையும் விதித்தது. சோனியாவிடம் படத்தை வெறியிட நோ அப்ஜெக் ஷன் சான்றிதழ் வாங்கி வரும்படி அது கோரியது.
தினேஷ்குமாரும் படத்தை பார்க்கும்படி சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு இன்றுவரை பதில் இல்லை. சென்சாரை மீண்டும் அணுகிய தினேஷ், சோனியாகாந்தியின் மவுனத்தையே நோ அப்ஜெக் ஷனாக கருதி படத்தை வெளியிட அனுமதிக்குமாறு கேட்டார். ஆனால் சென்ஸார் அதற்கு மறுத்தது.
இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் சென்றார் தினேஷ். நீதிமன்றத்திலிருந்து விளக்கம் கேட்டு சென்சாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் சென்சார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்சார் தனது நிபந்தனையை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்நது வழக்கை முடித்துக் கொள்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
சோனியா படத்துக்கான தடை முழுமையாக நீங்கிய நிலையில் படத்தை விரைவில் வெளியிட மும்முரமாக உள்ளார் தயாரிப்பாளர் தாகூர் தினேஷ் குமார்.