தென்னிந்தியாவைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அமெரிக்கா செல்ல அமெரிக்க துணைத் தூதரகம் ஆயுட்காலத் தடை விதித்துள்ளது!
குஸ்தி, கஜேந்திரா போன்ற படங்களில் நாயகியாக நடித்த ஃபுளோரா அமெரிக்கா செல்ல விசா கேட்டிருந்தார். அவருடன் அவரது மேக்கப் விமன் ஸ்ரீலதாவுக்கும் விசா விண்ணப்பிக்கப்பட்டது. தூதரக விசாரணையில், ஸ்ரீலதாவுக்கு மேக்கப் குறித்து எதுவும் தெரியாது என்பதும், அவருக்கு அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி புரோக்கர் மூலம் ஃபுளோரா அமெரிக்கா அழைத்துச் செல்லும் விவரமும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஃபுளோரா கைது செய்யப்பட்டார்.
படப்பிடிப்புக்காகவும், கலைநிகழ்ச்சி நடத்துவதற்காகவும் அமெரிக்கா செல்வதாகக் கூறி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவது அதிகரித்து வருவதாகக் கூறி, தென்னிந்தியாவைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் அமெரிக்கா செல்ல ஆயுட்காலத் தடை விதிப்பதாக சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் அதிகாரி டேவிட் ஹூப்பர் தெரிவித்தார். இது தென்னிந்திய சினிமாவுக்கு எதிராக நடவடிக்கை இல்லை என்றவர், தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர்களைக் கூற மறுத்துவிட்டார்.