'தி நேம் ஈஸ் ரஜினிகாந்த்' புத்தக வெளியீட்டு விழா. பத்திரிகையாளர் சோ, தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், முன்னால் சி.பி.ஐ.இயக்குநர் கார்த்திகேயன், நடிகர்கள் கார்த்தி, சிவக்குமார், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என அரங்கு நிறைய வி.ஐ.பி.க்கள். டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதிய புத்தகத்தை சோ வெளியிட செளந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
ரஜினியை பதவி ஆசை இல்லாதவர், இறைவனின் விருப்பப்படி நடப்பவர் என்றெல்லாம் புகழ்ந்தார் சோ. இடைச்செருகலாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் ரஜினியை ஒப்பிட்டார்.
'தனியாக முடிவெடுக்கக் கூடாது என மகாபாரதம் கூறுகிறது. அதன்படி ரஜினி பலரிடம் கேட்டுத்தான் முடிவெடுப்பார். மோடியும் அப்படித்தான். அதனால்தான் அவரால் குஜராத்தில் ஜெயிக்க முடிந்தது. ரஜினி அரசியலுக்கு வந்தால் மோடியின் குஜராத்தைப் போலத் தமிழகமும் உயரும்' என்றார் சோ.
கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியானதற்கு மோடி அரசே காரணம். அவருடைய சிறுபான்மை விரோதப் போக்கு நாடறிந்தது. அவருடன் ரஜினியை ஒப்பிட்டது கூட்டத்தில் முணுமுணுப்பை ஏற்படுத்தியது.