ஒரே மேடையில் ரஜினி, கருணாநிதி, மருத்துவர் ராமதாஸ். இந்தக் காட்சியின் கற்பனையே சுவாரஸியம். உண்மையாக நடந்தால்?
அதற்கான முயற்சியில் தங்கர் பச்சான் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் நூறாவது நாள் விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தைப் பார்த்த வி.வி.ஐ.பி.களான தமிழக முதல்வர் கருணாநிதி, மருத்துவர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தங்கர் பச்சானை தனித்தனியாகப் பாராட்டினர்.
தனித்தனியே பாராட்டிய இவர்களை நூறாவது நாள் விழாவில் ஒன்றாக மேடையேற்ற தங்கர் பச்சான் விரும்பினார். அதற்கான வேலைகளும் நடந்து வந்தன.
வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்த கதையாக, அனைத்தும் கூடிவரும் நேரம், மாநிலங்களவை எம்.பி. பிரச்சனையில் தி.மு.க.வும், பா.ம.க.வும் முட்டிக்கொண்டு நிற்கின்றன. இதனால் தங்கர் பச்சானின் கனவு மெய்ப்படுமா என்பது சந்தேகமே!