நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜோதா அக்பர் ஹிந்தித் திரைப்படத்தைத் திரையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மார்ச் 14 ஆம் தேதி வரை நீக்கி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜோதா அக்பர் திரைப்படத்தில் வரலாறு திரித்துக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி அப்படத்தைத் திரையிடுவதற்கு உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட் மாநில அரசுகள் தடை விதித்தன.
இதை எதிர்த்து அப்படத்தைத் தயாரித்த யு.டி.வி. சாஃப்ட்வேர் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அதில், ஜோதா அக்பர் திரைப்படம் பொழுதுபோக்கிற்காகத் தயாரிக்கப்பட்டதே தவிர, வரலாற்றுத் திரைப்படம் அல்ல என்பதால் தடையை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
மேலும், அரசியல் காரணங்களுக்காக ஜோதா அக்பர் திரைப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் யு.டி.வி. நிறுவனம் குற்றம்சாற்றியிருந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு, ஜோதா அக்பர் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மார்ச் 14 ஆம் தேதி வரை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.