இலக்கியத்தின் மீது இயக்குனர் வஸந்திற்கு தீராக் காதல். எழுத்தாளர் சா. கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையை குறும்படமாக எடுத்தவர், கந்தசாமியின் சாயவனம் நாவலை திரைப்படமாக எடுப்பதற்கு முறைப்படி உரிமை வாங்கியிருக்கிறார்.
எழுத்தாளர் அசோகமித்ரனின் தண்ணீர் நாவலின் உரிமையும் வஸந்திடமே இருக்கிறது. மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா, தண்ணீரை இந்தியாவின் சிறந்த நாவல்களில் ஒன்றாக மதிப்பிடுகிறார்.
சமீபத்தில் தண்ணீர் நாவலின் உரிமை வஸந்திடம் இருப்பதை அறிந்து தயாரிப்பாளர் ஒருவர் வஸந்தை அணுகியிருக்கிறார். அவர் அழுத்திக் கேட்டும் தண்ணீர் நாவலின் உரிமையைத் தர மறுத்திருக்கிறார் வஸந்த்.
எத்தனை வருடங்கள் ஆனாலும், தண்ணீரை தானே இயக்குவது என்ற முடிவில் இருக்கிறார் வஸந்த். விரைவில் அந்த வசந்தம் வந்தால் நல்லது.