உணர்ச்சியும், நெகிழ்ச்சியும் மிக்கதாய் இருந்தது சென்னை ஃபிலிம்சேம்பரில் நடந்த 'இந்திர விழா' மற்றும் 'அனல் காற்று' படங்களின் தொடக்க விழா!இந்திர விழாவின் இயக்குனர் கே. ராஜேஷ்வர். 'அனல் காற்றின்' (கோடை விடுமுறை) இயக்குனர் பாலு மகேந்திரா. இரண்டு படங்களையும் தயாரிப்பது ANKK மூவிஸின் அசோக் கே. கோத்வானி!
பலர் மைக் பிடித்தாலும் வழக்கம் போல பேச்சில் கவர்ந்தவர் கவிப் பேரரசு வைரமுத்து. "உலகப் பேரழகி லைலா உண்மையில் அத்தனை அழகில்லாதவள். கறுப்பு நிறம், சப்பை மூக்கு. மஜ்னுவின் நண்பர்கள் இதைச் சுட்டிக் காட்டியபோது, மஜ்னு சொன்னான், நீங்கள் லைலாவை எனது கண் கொண்டு பார்க்க வேண்டும். அதுபோல உலக அழகை பாலுமகேந்திராவின் கேமரா வழி பார்க்க வேண்டும்" என்று பேரழிகியையும், கேமரா கவிஞரையும் ஒப்பிட்டுப் பேசினார்.
பாலுமகேந்திராவின் குரலில் நெகிழ்ச்சி. "சினிமாவுக்காக பள்ளிக்கூடம் தொடங்கலாம் என்று இருந்தேன். ராஜேஷ்வர்தான் பள்ளிக்கூடம் திறந்தால் வெறும் வாத்தியாராகி விடுவீர்கள். சினிமாவுக்கே வாருங்கள் என்று அழைத்தார். இந்த சினிமா வாய்ப்பே அவரால்தான் கிடைத்தது" என்றார்.
விழாவில் 'இந்திர விழா' நாயகன் ஸ்ரீகாந்த், நமிதா கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் ஹேமமாலினி என்ற புதுமுகத்தை ராஜேஷ்வர் அறிமுகப்படுத்துகிறார். சிறப்பு அழைப்பாளராக ராஜ்குமார் சந்தோஷி கலந்து கொண்டார்.
விழாவின் தொடக்கத்தில் நடன நிகழ்ச்சி, பிறகு சிறப்புரை என ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர்.
இரு படங்களையும் தயாரிக்கும் ANKK மூவிஸ், இந்தியில் பலப் படங்கள் தயாரித்த அனுபவம் கொண்டது. குத்து விளக்கு ஏற்றுதல், குளறுபடியான நிகழ்ச்சி நிரல் ஏதுமில்லாத தொடக்க விழாவிலேயே தயாரிப்பு நிறுவனத்தின் தரத்தை உணர முடிந்தது.