கமல் பத்து வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தின் ஸ்டில்களைப் பார்ப்பதே பிரம்மனைப் பார்ப்பதைப் போல் அத்தனை கடினமாக இருக்கிறது.
இதில் மொத்தப் படத்தையும் ஒருவர் பார்த்திருக்கிறார் என்றால் அதில் அதிசயத்திலும் அதிசயம் அல்லவா?
அந்த அதிசயத்திற்குச் சொந்தக்காரர் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்!
'தசாவதாரம்' படத்துக்கு இசையமைக்க ஒத்துக் கொண்டவர் ஹிமேஷ் ரேஷமய்யா. ஒத்துக் கொண்டது போல படத்தின் பாடல்களுக்கு டியூன் கொடுத்து ரிக்கார்டிங்கும் முடிந்து படிப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. மீதம் இருந்தது பின்னணி இசை.
அதற்குள் ஹிமேஷ் ரேஷமய்யாவுக்கு நாலாப் பக்கமிருந்தும் நாயகன் வேஷம் வர, தசாவதாரத்திற்குப் பின்னணி இசை அமைக்க முடியாத நிலை.
இந்நிலையில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு ஃபோன் கால் ஒன்று வந்தது. எனது தசாவதாரம் படத்துக்குப் பின்னணி இசை அமைக்கச் சம்மதமா எனக் கேட்டது சாட்சாத் கமல் ஹாசனேதான்.
"கமல் சாரின் 'சலங்கை ஒலி' பார்த்துச் சினமாவிற்கு வந்தவன் நான். இந்த வாய்ப்பை விடுவேனா" என்றார் தேவிஸ்ரீ பிரசாத்!
கமலின் பத்து வேடங்களைப் பார்த்துக் கிறங்கிப் போனவர், எனது இசை வாழ்வில் இதுவொரு மைல் கல்லாக இருக்கும் என்றார் நிஜமான பெருமிதத்துடன்!