ரூ.2 கோடி பணத்தை நடிகர் கமல்ஹாசன் திருப்பித் தரக்கோரி பட அதிபர்கள் சங்கத்தில் இயக்குனர் சரண் புகார் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற படத்தை இயக்கிய சரண், அடுத்து கமல்ஹாசனை வைத்து சொந்தப்படம் தயாரிக்கவும், அவரே இயக்கவும் முடிவு செய்து இருந்தார். இது பற்றி கமல்ஹாசனிடம் கூறிய போது, அந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து, கமல்ஹாசனுக்கு ரூ.2 கோடி ரூபாய் முன்பணமாக சரண் கொடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையில் சரணுக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. கமல்ஹாசனை வைத்து அந்தப் படத்தை அவர் தயாரிக்க முடியாத சூழ்நிலை வந்தது. எனவே அந்தப் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஐய்ங்கரன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திடம் சரண் ஒப்படைத்தார். இயக்குனர் பொறுப்பை மட்டும் அவர் வைத்துக் கொண்டார்.
இந்தத் திட்டத்தில் கமல்ஹாசனுக்கு உடன்பாடு இல்லை. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ``சொன்னபடி நீங்கள் நடந்து கொள்ளவில்லை. எனக்குத் தெரியாமல் தயாரிப்பாளரையும் நீங்கள் மாற்றி விட்டீர்கள். இதனால் உங்கள் படத்தில் நான் நடிக்க முடியாது. உங்களிடம் வாங்கிய ரூ.2 கோடியை திருப்பித் தந்து விடுகிறேன்'' என்று கூறினார்.
இந்தநிலையில் கமல்ஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குனர் சரண் புகார் கொடுத்துள்ளார். அதில், 'கமல்ஹாசனிடம் நான் கொடுத்த ரூ.2 கோடியை அவர் இன்னும் திருப்பித் தரவில்லை. எனக்கு அந்தத் தொகையை அவர் திருப்பித் தர உத்தரவிட வேண்டும் அல்லது என் இயக்கத்தில் கமல்ஹாசனை நடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று சரண் கூறி இருக்கிறார்.
இந்தப் புகார் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூடி முடிவெடுக்க இருக்கிறது. இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறுகையில், கமல்ஹாசன் மீது இயக்குனர் சரண் புகார் கொடுத்து இருப்பது உண்மைதான். இந்தப் பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் கவனமாக செயல்படும். கமல்ஹாசன் ஒரு பெரிய நடிகர். அவர் மீது சரண் கொடுத்த புகாரில் உண்மையுள்ளதா? என்று விசாரித்து முடிவு செய்வோம் என்றார்.