கணவர் கொடுமைப்படுத்தியதால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நடிகை மீரா வாசுதேவன், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
உன்னை சரண் அடைந்தேன், ஜெர்ரி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளவர் மீரா வாசுதேவன். இவர் பல்வேறு டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவருக்கும், பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷால் அகர்வாலுக்கும் 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், நான் சம்பாதித்த பணத்தை என் கணவர் பிடுங்கிக்கொண்டு அடித்து துன்புறுத்தினார்'' என்று கடந்த மாதம் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீரா வாசுதேவன் புகார் கொடுத்தார். இந்த புகார் காவல் நிலையத்தில் நிலுவையில் நிலுவையில் உள்ளது. இவர்களுக்கு குழந்தை கிடையாது.
இந்த சூழ்நிலையில், மீரா வாசுதேவன் தனது வழக்கறிஞர் ரீட்டா சந்திரசேகரனுடன் நேற்று சென்னை குடும்பநல நீதிமன்றத்துக்கு வந்தார். தனது கணவரிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டுமென்று மீரா வாசுதேவன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், தனது கணவர் கொடுமைப்படுத்தியதால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல், கணவர் ரூ.50 லட்சத்தை தனக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.