''சினிமாவில் இனிமேல் புகை பிடிப்பது போல் நடிக்க மாட்டேன்'' என்று நடிகர் விஜய் கூறினார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, சென்னையில் சமீபத்தில் நடந்த `தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய,போது, சினிமாவில் குடிப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்துக்கு பிறகு, ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அதேபோல் நடிகர் விஜய்யும் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர் அன்புமணியின் இந்த கோரிக்கையை, நடிகர் விஜய் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து நடிகர் விஜய் கூறுகையில், மத்திய அமைச்சர் அன்புமணியின் கருத்தை வரவேற்கிறேன். புகைப்பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம் ஆரோக்கியமான விஷயம்தான். அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்.
சமீபத்தில் நான் நடித்து திரைக்கு வந்த `அழகிய தமிழ் மகன்' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தேன். அதில், ஒரு வேடம் கெட்டவன். அவன் கெட்டவன் என்பதை காட்டுவதற்காகவே, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை இயக்குனர் வைத்திருந்தார். படத்தின் இறுதியில், அவன் திருந்துவதை காட்டுவதற்காக, சிகரெட்டை தூக்கி எறிவது போல்தான் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இனிமேல், அதுபோன்ற காட்சிகளை கூட தவிர்க்க முயற்சி செய்கிறேன் என்று நடிகர் விஜய் கூறினார்.