ரசிகர் என்ற போர்வையில் சில வியாபாரிகள் ஆன் லைன் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாற்றியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக www.universalherokamal.com என்ற தலைப்புடன் இணையதளம் மூலமாகவும் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் எனது அனுமதி இல்லாமல் எனது ரசிகர்கள் என்ற போர்வையுடன் சில வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இவர்களுடன் ஆர்குட் டாக்டர் கமல்ஹாசன் கம்யூனிட்டி என்கிற அமைப்பும் இணைந்து இருப்பது தெரியவருகிறது. எனது ரசிகர்களை கட்டுப்பாட்டுடன் நற்பணிகளில் ஈடுபடுத்தி வரும் என் முயற்சிகளுக்கு இவர்கள் செயல்ரீதியான விரோதிகளாகின்றனர் என கமல் தெரிவித்துள்ளார்.
எனது வெளிவர இருக்கும் படங்களையோ, எனது வெளிவராத, வந்த படங்களையோ விலை பட்டியலிட்டு (எனது படங்கள் அச்சிட்ட டி சர்ட் உட்பட) விற்கும் உரிமையை நானோ, எனது தயாரிப்பாளரோ இவர்களுக்கு வழங்கவில்லை. எனது அனுமதியின்று செயல்படும் இவர்களுக்கு எந்த ஒத்துழைப்பும், நமது நற்பணி இயக்கங்களும், எனது உண்மையான ரசிகர்களும் வழங்க தேவையில்லை என்பதை இவ்வறிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுவரை இவர்கள் பெங்களூர், புதுச்சேரி போன்ற இடங்களில் எனது அனுமதியின்றி விற்பனையில் இறங்கிய செயலுக்கு நியாயமான, சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.