பிரபல தமிழ் நடிகை பூமிகாவுக்கும், மும்பையை சேர்ந்த யோகாசன நிபுணர் பரத் தாக்கூருக்கும் வரும் 25ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது.
மும்பையை சேர்ந்தவர் நடிகை பூமிகா. இவர், தமிழில் ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் நடிகர் விஜயுடன் பத்ரி, சூர்யாவுடன் சில்லென்று ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகை பூமிகாவும், மும்பையை சேர்ந்த யோகாசன நிபுணர் பரத் தாக்கூரும் கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் வரும் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து உள்ளனர். மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருமணத்துக்கு இரு குடும்பத்தினருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
திருமண செய்தியை நடிகை பூமிகாவும், பரத் தாக்கூரும் உறுதி செய்து உள்ளனர். இன்னும் 15 நாளில் பத்திரிகையாளர்களை அழைத்து இதுபற்றி முறைப்படி அறிவிப்போம் என்று அவர்கள் கூறினர்.