Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே மேடையில் இளையராஜா-பாரதிராஜா!

ஒரே மேடையில் இளையராஜா-பாரதிராஜா!

Webdunia

எல்லோர மூவி கிளப் பட நிறுவனம் சார்பில் ராஜ்பா ரவிஷங்கர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரிக்கும் அஜந்தா படத்துக்காக 36 பாடல்கள் பதிவு செய்யப்பட்டது. ஒரே இசையமைப்பாளர் இசையமைப்பில், ஒரே படத்துக்காக இத்தனை பாடல்கள் பதிவு செய்யப்பட்டது உலகத்திலேயே இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஆடியோ கேஸட் வெளியீட்டு விழா மார்ச் 27ம் தேதி மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாலை 6.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இப்படத்தின் ஆடியோ சி.டி.யை இளையராஜா வெளியிட, பாரதிராஜா பெற்றுக் கொள்கிறார். ஆடியோ கேஸட்டை இளையராஜா வெளியிட, இயக்குநர் சேரன் பெற்றுக் கொள்கிறார்.

இந்திய சினிமா வரலாற்றிலேயே திறந்தவெளி அரங்கில், மக்கள் முன்னிலையில் திரைப்பட ஆடியோ கேஸட் வெளியீட்டு விழா நடைபெறுவது இதுதான் முதல் முறை! அதோடு, இசைஞானி இளையராஜா திறந்த வெளி அரங்கில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக இன்னிசை நிகழ்ச்சி நடத்துவதும் இதுவே முதல் முறை!

அஜந்தா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, இசைஞானி இலக்கியப் பேரவை துவக்க விழாவும், தமிழ் இலக்கியத்தில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு பதக்கமும், பரிசும் வழங்கப்படவிருக்கிறது. பா.நமச்சிவாயம் அவர்களுக்கு தமிழறிஞர் விருதும் இரண்டு லட்சம் ரொக்கப்பரிசும், வண்ணதாசன் அவர்களுக்கு படைப்பிலக்கிய விருதும் இரண்டு லட்ச ரொக்கப் பரிசும், சேதுபதி, பழநிபாரதி இருவருக்கும் இசைஞானி இளையராஜா விருதுடன் ஐம்பதாயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படவிருக்கிறது.

இவை தவிர, இசைஞானி இலக்கிய பெருமன்ற கெரளவ விருது என்ற பெயரில், "இளைய இசைமுரசு" டி.எஸ்.ராஜா (ராஜபர்ட்), தேனிசைத் தென்றல் எம்.ரேணுகாதேவி (ஸ்த்ரீ பார்ட்), இன்னிசை வேந்தன் எம்.யு.பிரேம்குமார்(ஆர்மோனிய பின்பாட்டு), கோடை இடிமுழுக்கம் கே.எஸ். சின்ன கோபால்(மிருதங்கம் டோலக்) ஆகிய நான்கு பேருக்கு விருதும், பத்தாயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படவிருக்கிறது.

பரிசளிப்பு விழாவைத் தொடர்ந்த அஜந்தா படத்தில் இடம்பெறும் ஒன்பது பாடல்களையும், திரைப்படத்தில் பாடிய பின்னணி பாடகர், பாடகிகளைக் கொண்டு இன்னிசை நிகழ்ச்சியாக நடத்த இருக்கிறார் இளையராஜா. அந்த மேடையில் இளையராஜா உடன் கே.ஜே.ஜேசுதாஸ், விஜய்ஜேசுதாஸ், உன்னிகிருஷ்ணன், திப்பு, மஞ்சரி, ஸ்வேதா, பவதாரணி, மதுமிதா ஆகியோர் பாடுகிறார்கள். இந்த விழாவில் கவிஞர்.வாலி, எழுத்தாளர் ஜெயகாந்தன், சினேகன், கவிஞர் முத்துலிங்கம், மு.மேத்தா, பழனிபாரதி, பா.விஜய், நா.முத்துகுமார், செந்தில்குமரன், சினேகன், கவிஞர்.பொன்னடியான், சங்கிலிமுருகன், இயக்குநர் கோகுலகிருஷ்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் ராஜ்பா ரவிஷங்கர், இயக்குநர் கதா.க.திருமாவளவன் செய்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil