Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குநர்களாகும் ஒளிப்பதிவாளர்கள்!-ஓர் அலசல்

இயக்குநர்களாகும் ஒளிப்பதிவாளர்கள்!-ஓர் அலசல்

Webdunia

ஒரு திரைப்படத்தை உருவாக்குவது இயக்குநராக இருக்கலாம். ஆனால் அதை முதலில் பார்ப்பவர் படத்தில் ஒளிப்பதிவாளர் தான் என்பார்கள். காட்சிகளை கேமிரா வழியே உள்ளபடியே பார்ப்பவர் ஒளிப்பதிவாளர் தான். அது மட்டுமல்ல படத்தில் ஒரு பிரேம் விடாமல் பதிவு செய்து முழுப்படத்திலும் பங்களிப்பு செய்பவர்-ஆதிக்கம் செலுத்துபவர் ஒளிப்பதிவாளர்தான்.

இப்படி ஒரு படத்தில் உள்ளாதிக்கம் செலுத்தி வந்த ஒளிப்பதிவாளர்களுக்கு மேலாதிக்கம் செய்ய ஆசை வந்துவிடுகிறது. அதன் விளைவுதான் ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்கள் ஆவது.

இப்போது இது அதிகரித்து வருகிறது. அதில் அவர்கள் எந்த அளவில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்?

பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்களுக்கு அடுத்ததாக முளைக்கும் ஆசை தாமும் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான். சில படங்களின் அனுபவத்திற்குப் பின் அவர்கள் பேச்சில் எதிரொலிப்பது "அடுத்து இயக்கம் தான்..." என்கிற ஆசை தான். "ஒரு படமாவது டைரக்ட் பண்ணலாம்" என்று சொல்லிக் கொண்டிருக்கிற பல கேமரா மேன்கள் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் அப்படி இயக்குநர்கள் ஆகிறவர்கள் எத்தனை பேர் பெயர் சொல்லியிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி.

நடிகர்களில் நீங்கள் படம் இயக்கக் கூடாதா என்று நடிகர் திலகம் சிவாஜியிடம் கேட்ட போது "அதெல்லாம் பெரிய விஷயம். நமக்கு நடிப்பு தவிர வேற எதுவும் தெரியாதுப்பா!" என்றாராம். தேசிய விருது பெற்ற மம்மூட்டி கூட இந்த நடிப்பு அனுபவத்தை வைத்துப் படம் இயக்கலாமே என்ற போது "ஐயோ அதெல்லாம் பெரிய வேலை" என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் தங்கள் இயக்கத்தில் ஒரு படம் வர வேண்டும் என்கிற கனவு பல நடிகர்களுக்கும் இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. அந்தக் காலத்து எம்.ஜி.ஆர் முதல் இப்போதைய கமல், சத்யராஜ், நாசர், அர்ஜீன், சின்னி ஜெயந்த், சிம்பு வரை இந்தப் பட்டியல் நீள்கிறது. கமலுக்கே மிகவும் தாமதமாகவே துணிவு வந்தது. அப்படி இயக்கத்தில் குதித்த நடிகர்களும் அடுத்தடுத்த படங்களை இயக்கவில்லை எம்.ஜி.ஆர். உள்பட அப்படி என்றால் அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பதா? அவ்வளவு சிரமமான வேலை என்பதா?

நடிகர்கள் இயக்குவது என்பதே ஒரு அரைகுறை வேலைதான். ஏனென்றால் படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் இவர்களே நடித்துக் கொண்டு இயக்குநர் வேலை பார்ப்பது எந்த அளவுக்கு சாத்தியம்? என்று கேள்வி எழுப்பப்படுவது உண்டு. இதில் நியாயம் இருப்பினும் நடித்து இயக்கி பாக்யராஜ், டி.ராஜேந்தர் தனியிடம் பிடித்ததையும் மறக்க முடியாது.

அப்படித்தான் இந்த ஆசை ஒளிப்பதிவாளர்களுக்கும் வந்திருக்க வேண்டும். இயக்குனர் சொல்கிற "ஸ்டார்ட் கேமரா.. கட்" கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடக்கிற நாம் ஏன் "கட்" சொல்லும் தகுதியை அடையக் கூடாது என்கிற எண்ணம் எழுந்திருக்கக் கூடும். அதுவே ஆசையாகியிருக்கும்.

விளைவு இயக்குநர்களாகும் ஒளிப்பதிவாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் உதாரணம் காட்டுவது பாலுமகேந்திராவைத்தான்.

ஆனால் பாலு மகேந்திராவை ஒளிப்பதிவு செய்யத் தெரிந்த இயக்குநர் என்கிற வகையில் தான் பார்க்க வேண்டும். ஏனெனில் தொழில் ரீதியாக அவர் பிற இயக்குநர் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது மிகமிகக் குறைவு. தன் படங்களுக்கு மட்டுமே அதாவது தான் இயக்கும் படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்து வருகிறார். அவர் நாடறிந்த இயக்குநர் என்றே அறியப்படுகிறவர். அவரை ஒளிப்பதிவாளர் என்கிற தலைப்பில் கொண்டுவந்தால்-முதன்மைப் படுத்தினால் அது சரியானதாக இருக்காது. அவர் படங்களுக்கு படத்தொகுப்பும் அவரே செய்கிறார். அவரை ஒரு படத்தொகுப்பாளராக முன்னிலைப்படுத்த முடியாது அல்லவா? திரைக்கதை, இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, இயக்கம் என்று பல பொறுப்புகளை ஏற்ற டி.ராஜேந்தரையும் ஒரு தனியான ஒளிப்பதிவாளராக அடையாளம் காட்ட இயலாது.

பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார் "அன்று பெய்த மழையில்" "தம்பிக்கு ஒரு பாட்டு" போன்று சில படங்களை இயக்கினார். நிற்கவில்லை. நீடிக்கவில்லை. அந்தப் படங்களில் கூட அவரது ஒளிப்பதிவுதான் பேசப்பட்டது. இயக்கம் அல்ல.

ஒளிப்பதிவாளர்களில் தனியிடமும் ரசிகர் வட்டமும் கொண்ட பி.சி.ஸ்ரீராம் இயக்குநரானார். அவரது இயக்கத்தில் வந்த "மீரா"வில் பேசப்பட்டது கூட அவரது ஒளிப்பதிவுதான். பிறகு இயக்கிய "குருதிப் புனலி"ல் கமலின் பங்களிப்பு தான் பேசப்பட்டது. "வானம் வசப்படும்" படத்திலும் வெற்றி வசப்படவில்லை. ஒரு வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக புகழ்பெற்ற இவருக்கு இயக்குநராக வெற்றி வந்து சேரவில்லை என்றே கூற வேண்டும்.

தங்கர் பச்சான் "அழகி" எடுத்து வெற்றி பெற்றார். அதன் பிறகு "சிதம்பரத்தில் அப்பாசாமி"யில் தோல்வி தான். இப்போது தான் "பள்ளிக்கூடம்" இயக்குகிறார். அவர் அடிப்படையில் ஒர் எழுத்தாளர் என்பதால் இயக்குநரான முதல் படத்தில் வெற்றி பெற்றார் எனலாம்.

விஜய் மில்டன் "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" நட்சத்திர பலம் இருந்தும் வெற்றி பெறவில்லை. இதில் ஒளிப்பதிவுதான் பேசப்பட்டது. இயக்கமல்ல.

ஜீவா இயக்குநரானார் "12பி", "உள்ளம் கேட்குமே" படங்கள் வந்தன. இவற்றில் ஒளிப்பதிவே பாராட்டப்பட்டது. இப்போது "உன்னாலே உன்னாலே" "தாம் தூம்" என்று படங்கள் உள்ளன. ஜீவா இயக்கிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன என்று கூற முடியாது.

பல படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த என்.கே.விஸ்வநாதன் "நாடோடிப் பாட்டுக்காரன்" "பெரிய மருது" போன்று சில படங்களை இயக்கினார். பிரமாதமான வெற்றி வரவில்லை.

பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் "மின்சாரக் கனவு" இயக்கினார். பெரிய நட்சத்திரக் கூட்டணியால் படம் ஒரளவு வெற்றி பெற்றது. ஆனால் அவர் இயக்கிய மிகப் பிரம்மாண்ட ஸ்டார் கூட்டணியான "கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" சறுக்கியது.

அப்துல் ரகுமான் "மனசு" இயக்கினார். வெளிவரவே சிரமப்பட்டது.

இப்படி ஒளிப்பதிவாளர்கள் இயக்கிய படங்களில் ஒளிப்பதிவு பேசப்பட்ட அளவுக்கு இயக்கம் பேசப்படவில்லை. தொழில் ரீதியாக ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாகி வணிக ரீதியான வெற்றியும் பெறவில்லை என்றே கூறவேண்டும்.

ஒளிப்பதிவு போல இயக்கத்தையும் ஒரு தொழில்நுட்பமாகக் கருதுவதே காரணமாக இருக்கலாம். இயக்கம் படைப்பு சார்ந்த வேலை என்பதை உணரவேண்டும். இயக்கம் ஒரு தொழில் நுட்பம் என்று எண்ணாமல் படைப்பாற்றல் என்று கருதி ஈடுபடுகிறவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil