குடிக்கிற காட்சியில் நடிக்க மாட்டேன் - நடிகர்களின் Noise Pollution
, வெள்ளி, 21 மார்ச் 2014 (11:46 IST)
நடிகர்கள் செய்வதை அப்படியே ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். மேலும் நான் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவன். ஆகையால் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது.
எனவே இனி என்னை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களிடம் இனிமேல் மது அருந்துவது போன்ற காட்சியில் கண்டிப்பாக இனி நடிக்க மாட்டேன் என்பதை தெரிவித்துள்ளேன். அதன்படி இனி நான் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகள் இருக்காது - உதயநிதி ஸ்டாலின்.ஒருவன் எவ்வளவு நல்லவனாக, திறமைசாலியாக இருந்தாலும், சே... அவன் குடிகாரன் என்று ஒரே வார்த்தையில் அவனை குப்புற தள்ளிவிட முடியும். அதேமாதிரிதான் நான் குடிக்கிறதில்லை, குடிக்கிற காட்சியில் நடிக்கிறதில்லை என்று சொல்லி இமேஜை உயர்த்திக் கொள்வதும். இரண்டுமே தவறுதான்.என்னுடைய படத்தில் ஆபாசக் காட்சிகள் இருக்காது, குடிக்கிற காட்சியை வைக்க மாட்டேன், புகைக்கு இடமேயில்லை என்று சில இயக்குனர்களும், நடிகர்களும், தயாரிப்பாளர்களும் கூறுவதை கேட்டு வருகிறோம். இந்தக் காட்சிகளை தமிழ் சினிமா பெரும்பாலும் தவறாகவே கையாண்டு வருகிறது. அப்படி தவறாக கையாள்வதற்குப் பதில் அவைகள் இல்லாமல் இருப்பது ஆறுதல். அந்த அளவில் மட்டுமே இவர்களின் சமூக கரிசனத்தை எடுத்துக் கொள்ள முடியும். இந்தக் காட்சிகள் இல்லாததாலேயே இவர்களின் படங்கள் நல்ல படம் ஆகிவிடாது.
ஜெமினி படத்தில் ஸ்டைலாக புகைப் பிடிப்பது போல்தான் இயக்குனர் சரண் விக்ரமின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார். பிறகு அது பான் போடுவதாக மாற்றப்பட்டது. படத்தை தயாரித்த ஏவிஎம் ஸ்டுடியோ தங்களின் படங்களில் புகைப் பிடிக்கும் காட்சிகள் வைப்பதில்லை என்பதால் இந்த மாற்றம். சிகரெட்டுக்குப் பதில் பான். இதில் என்ன சமூக மாற்றம் நிகழ்ந்துவிட்டது? ஜெமினி தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாகிவிட்டதா?