வீரம் செமையா ஒரு சிக்ஸர் - ரசிகர்களின் விமர்சனம்
, வெள்ளி, 10 ஜனவரி 2014 (20:14 IST)
அஜித் ரசிகர்கள் ரஜினி மாதிரி. எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் எதுவும் தெரியாது. ஆனால் படம் வெளியாகிற அன்று தியேட்டரை திணறடித்துவிடுவார்கள். மன்றமே வேண்டாம் என்று அஜித் கலைத்த பிறகும் நெஞ்சம் இனிக்க கொடி கட்டுகிறார்கள் என்றால் கொடுத்து வைத்தவர் அஜித்தான். இனி ஓவர் டு வீரம்.
ஒட்டன் சத்திரம் கிராமத்தில் தம்பிகள் நான்கு பேருடன் தாடியும் மீசையும் தடாலடி நடவடிக்கையுமாக வாழ்கிறவர் அஜித். வழியே போகிற வம்பையும் தேடிப்போகிற தெனாவெட்டு பார்ட்டிகள் இந்த பஞ்ச பாண்டவர்கள். மனைவி என்று ஒருத்தி வந்தால் இந்த சகோதர நெருக்கம் சடுதியில் காணாமல் போகும் என்று திருமணமே கூடாது என்று சபதமெடுத்தவர்கள்.
பெண் விஷயத்தில் தவ முனிவர்களே தடுமாறும்போது இந்த ஐம்பெரும் தாடிகள் எம்மாத்திரம்? தம்பிகளில் இருவருக்கு காதல் வருகிறது. அண்ணனை யாராவது ஒரு பெண் கவிழ்த்தால்தான் தங்களின் காதல் கைகூடும் என்று கோயில் ஆராய்ச்சிக்கு வரும் கோப்பெருந்தேவியை (தமன்னா) அஜித்துடன் கோர்த்துவிடுகிறார்கள். அவரும் ஆசையோடு விழுந்துவிடுகிறார் தேவியிடம்.