ரஜினி 58 – முள்ளும் மலர்களும்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:09 IST)
ரஜினிக்கு இன்று 58 வது பிறந்த நாள். நடிகர் என்ற அடையாளத்துக்கு மேலாக அவரது பெயர் தமிழகத்தில் உருவாக்கியிருக்கும் தாக்கம் ஆச்சரியமானது. ரஜினியின் பிரபல்யத்தை தனிப்பட்ட சாதனையாக ஏற்க மறுப்பவர்களுக்கும் வியப்பளிக்கக்கூடிய புதிர் அது. சிவாஜிராவ் கெய்க்வாட் ரஜினியாக பரிமாணம் அடைந்த நெடுங்கதையின் சாராம்சத்தில் ஒருவேளை இந்த புதிருக்கான விடையை ஒருவர் காணக்கூடும்.பொருளாதார நெருக்கடியால் இடப்பெயர்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட குடும்பம் ரஜினியுடையது. மராட்டிய மன்னர் சிவாஜியின் பாதுகாவலர்களின் வாரிசுகளில் சிலர் கர்நாடாகாவுக்கு குடிபெயர்ந்தனர்.. சிலர் கிருஷ்ணகிரி அருகிலுள்ள நாச்சிக்குப்பத்தில் குடியேறினர். அப்படி குடிபெயர்ந்து வந்த குடும்பத்தில் பிறந்தவர் ரஜினியின் தந்தை ரானோஜிராவ் கெய்க்வாட். ரஜினியை அவரது தாயார் ராம்பாய் நாச்சிக்குப்பத்தில் பெற்றெடுத்தார் என்பது சமீபத்தில் தெரியவந்திருக்கும் உண்மை. இதனை முன்னிறுத்தி தமிழின அடையாளத்தை அவர்மீது பூசும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் பரம்பரைக்கு ரஜினியின் பூர்வீகம் குறித்த கவலை அவசியமற்றது. ரானோஜிராவுக்கு கர்நாடகா காவல்துறையில் வேலை கிடைத்ததை தொடர்ந்து கர்நாடகாவுக்கு மீண்டும் ஒரு இடப்பெயர்வை மேற்கொண்டது ரஜினியின் குடும்பம்.
ரஜினியின் நடத்துனர் வேலையும், அவரது சினிமா பிரவேசமும் அனைவரும் அறிந்தது. எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்த அற்புதமல்ல ரஜினியின் திரை பிரவேசம். பசி, பட்டினி, அலைச்சல், அவமானங்கள், காத்திருப்புகள், ஏமாற்றங்கள் என அனைத்தும் நிரம்பியது அவரது ஆரம்ப காலம். சினிமா பின்னணி வாய்க்கப்பெறாத ஒருவர் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் ரஜினியும் எதிர்கொண்டார்.கலைந்த சிகை, கறுத்த மேனி, அலட்சிய பார்வை, திரையில் அதுவரை பார்த்திராத ஸ்டைல் என ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரஜினி. சினிமாவின் அழகியல் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட அவரை தங்களின் பிரதிநிதியாக பார்க்க தலைப்பட்டார்கள் சாதாரண ஜனங்கள். அவர்கள், ஆறிலிருந்து அறுபதுவரை, ப்ரியா, முள்ளும் மலரும் படங்கள் ரஜனியின் நடிப்புத் திறமைக்கு இன்றும் சான்றுகளாக திகழ்கின்றன.இந்தப் பட்டியல் மேலும் வளராமல் நின்று போனதற்கு ஏவிஎம் தயாரித்த முரட்டுக்காளைக்கு பெரும் பங்குண்டு. கதை நாயகன் கதாநாயகனாக மாற்றம் கொண்ட விபத்து இந்த காலகட்டத்தில்தான் நடந்தது. அதிலிருந்து இன்று வரை ரஜினியால் மீண்டு வர முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளின் விருப்பத்திற்கேற்ப அவர் கட்டியெழுப்பிய கதாநாயக பிம்பத்திற்கு எதிராக செயல்பட்ட போதெல்லாம் அவருக்கு தோல்வியே பரிசானது. ராகவேந்திரராக அவர் நடித்த போதும், பாபாவில் சக்தி வேண்டி கடவுளிடம் கை ஏந்திய போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் அவரது ரசிகர்கள்.
இந்த இரு படங்கள் தவிர்த்து தனது ஆன்மீக ஈடுபாட்டை அனேகமாக அவர் யார் மீதும் திணித்ததில்லை. நான் யார் என்ற விடை தெரியாத கேள்வியை நோக்கியே அவரது...
ஆன்மீகப் பயணம் இருந்து வந்திருக்கிறது. புகழின் உச்சியிலும் நிலைதடுமாறாத மனம், அவருக்கு கிடைத்த ஆன்மீக பரிசென்றால் அதில் மிகையில்லை. தனது தேடுதல் பயணத்தில் ராகவேந்திரர், அருணாச்சலேஸ்வரர், பாபா என பல தளங்களை கடந்து வந்திருக்கிறார் ரஜினி. பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதிரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை.மனோரமா, மன்சூர் அலிகான், வேலு பிரபாகரன் போன்றோர் அவரை விமர்சித்த போது ரஜினியின் எதிர்தாக்குதல் அரவணைப்பாகவே இருந்ததை நாடறியும். இன்றைய தேதியில் அவரை தவிர்த்த தமிழக அரசியல் சாத்தியமில்லை. முத்து படத்தின்போது அவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு அவருக்கு எதிரான ஓட்டுகள் சிதறிப்போகாமல் ஓரணியில் திரள பெரிதும் உதவியது. இதனை ரஜினியின் தனிப்பட்ட வெற்றியாக சோ போன்றோர் முன்னிறுத்தியது நாடாளுமன்ற தேர்தலிலேயே பொய்யாக்கப்பட்டது. வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து பழகிவிட்ட ரஜினிக்கு அரசியலுக்குரிய பொறுமையும், சாதுர்யமும் கைவரப் பெறாததில் ஆச்சரியமில்லை.
திரையில் வரும் கதாநாயக பிம்பத்தை நிஜத்திலும் பேண வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு முன்பு வரை இருந்தது. அந்த அவஸ்தையை உடைத்தெறிந்தவர் ரஜினி. தனது வழுக்கை விழுந்த தலையை பொது இடங்களில் மறைக்க ஒருபோதும் அவர் முயன்றதில்லை.ஆரம்ப காலத்தில் அவர்மீது படிந்த கலகக்கார சாயல் இன்று இல்லை. இன்று அவர் ஒரு ஆன்மீகவாதி. சிறந்த குடும்பத் தலைவர். சமூக ஒழுக்கங்களை மீறாத நல்ல குடிமகன். மரபான சமூக ஒழுக்கங்களின் நிழலில் பாதுகாப்பை தேடும் அனைத்து தரப்பினருக்கும் அவர் ஆதர்ஷ புருஷன். அவரை விரும்புவதன் மூலம் அந்த பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறது தமிழ் சமூகம்.
ரஜினி என்பது இன்று ஒரு பெயர் மட்டுமல்ல. ரஜினி என்பது ஒரு நபருமல்ல. அதையெல்லாம் தாண்டி அது ஒரு மிகை யதார்த்த பிம்பம். அந்த பிம்பத்திற்கு எதிராக ரஜினியாலும் ஒன்றும் செய்ய இயலாது. ராகவேந்திரர், பாபா படங்கள் தோல்வி அடைந்ததற்கு இதுவே காரணம். ரஜினி இல்லாமலே அவரது பெயரில் கட்சி தொடங்குவதற்கும் காரணம் இதுவே. இந்த பிம்பத்திற்கு மேலும் மேலும் வலு சேர்க்கும் சிவாஜி, எந்திரன் போன்ற படங்களையே மீண்டும் மீண்டும் தேர்வு செய்கிறார் ரஜினி. சமூகத்தின் பிரக்ஞையில் பதிந்திருக்கும் அந்த பிம்பத்திற்கு இசைவாகவே குறைந்தபட்சம் தனது திரைவாழ்க்கையையாவது அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ரஜினிக்கு இருக்கிறது. ஒரு ப்ரியா, ஒரு முள்ளும் மலரும், ஒரு ஆறிலிருந்து அறுபதுவரை அவரது வாழ்வில் இனி சாத்தியமா என்பது கேள்விக்குறி. குசேலனில் தன்னை சுற்றியிருந்த தங்க வேலியை நெகிழ்த்தும் சந்தர்ப்பம் ரஜினிக்கு கிடைத்தது. அவர் விரும்பியும் அவரை சுற்றியிருந்த வியாபார நிர்ப்பந்தத்தால் அது முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.
ரஜினிக்கு இன்று எதிரிகள் யாருமில்லை. அவர் வெற்றி கொள்ள வேண்டியவர்கள் ஒருவருமில்லை. அவர் எட்ட வேண்டிய உயரங்களும் இல்லை. இன்று அவருக்கிருக்கும் ஒரே சவால், சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ரஜினி என்ற பிம்பத்தை கடந்து வருவது. இதன் பொருள் தனது அடையாளத்தை அளிப்பதல்ல. ஒரே அடையாளத்தில் தங்கிப் போகாமல் இருப்பது. இது சாத்தியமா என்றால், நிச்சயம் சாத்தியமே. ரஜினியின் ஆதர்ஷ நடிகர் அமிதாப்பச்சனே இதற்கு சிறந்த உதாரணம். எத்தனையோ சவால்களை வெற்றி கொண்ட ரஜினியால் இந்த சவாலையும் வெற்றி கொள்ள முடியும்.
மேலும், அடையாளங்களிலிருந்து மீள்வதுதானே உண்மையான ஆன்மீக விடுதலையும்கூட.