Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சிவா‌ஜி கணேசன் - மறக்கப்பட்ட சிறுதெய்வம்!

Advertiesment
‌சிவா‌ஜி கணேசன் - மறக்கப்பட்ட சிறுதெய்வம்!
webdunia photoWD
நடிப்பு என்றதும் தமிழ் மன‌ங்களில் தோன்றும் படிமம் சிவாஜி கணேசன். அவரைத் தவிர வேறொருவரை நடிப்பின் இலக்கணமாக வ‌ரித்துக்கொள்ள தமிழர்களுக்கு இன்னமும் தயக்கம் இருக்கிறது. மிகை நடிப்பு என்பது போன்ற விமர்சன‌ங்களை கடந்து ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தை ஆகர்ஷித்த கலைஞனாகவே சிவாஜி இரு(ந்திரு)க்கிறார்.

இம்மாத தொடக்கத்தில் சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ‌சிவா‌ஜி கணேசனின் நெரு‌ங்கிய நண்பரும், பராசக்தி படத்துக்கு வசனம் எழுதியவருமான முதல்வர் கருணாநிதி தனது கரகர குரலில் தனது ஆருயிர் நண்பனை நினைவுகூர்ந்தார்.

அவருக்கு சிலை வைக்க தான் மேற்கொண்ட கடும் முயற்சிகளை இன்னொருமுறை அவர் பகிர்ந்து கொண்டபோது, பார்வையாளர்களின் மனம் கனிந்திருக்கும். நெகிழ்ச்சியான முதல்வ‌ரின் உரையின் நடுவே மேடையை நோக்கி பலரும் வேண்டுகோள் ஒன்றை விடுத்தவண்ணம் இருந்தனர். “நடிகர் திலகத்துக்கு உடனே மணிமண்டபம் கட்ட வேண்டும்”.

துரதிர்ஷ்டவசமாக - அப்படித்தான் சொல்ல வேண்டும் - இந்த கோ‌ரிக்கைக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் முதல்வர் தனது உரையை முடித்துக் கொண்டார். இந்த கோ‌‌ரிக்கை அன்று முதன்முதலாக வைக்கப்பட்டது அல்ல. 2001-ம் ஆண்டு ஜுலை 21 சிவாஜி கணேசன் மரணமடைந்த போதே கலையுலகினராலும், அவரது ரசிகர்களாலும் முன்வைக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு அதாவது 2002 செப்டம்ப‌ரில் இதற்கு பதில் கிடைத்தது. அன்றைய அரசு சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோவுக்கு எதிரே மணிமண்டபம் அமைக்க 0.65 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. மணிமண்டபம் உடனே அமைக்கப்படும் என சிவாஜியின் ரசிகர்கள் மகிழ்ந்திருந்தனர். அதற்கு மாறாக மணிமண்டப வேலைகள் தொட‌ங்கப்படாமல் தள்ளிப் போயின.

நீதிபதிகளின் குடியிருப்பு அந்தப் பகுதியில் இருப்பதால் போக்குவரத்து நெருக்கடிகள் பாதுகாப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே மணிமண்டபம் கட்டுவதென்றால் முதலில் குறுக்குப் பாதை அமைக்க வேண்டும் என்று அரசு சார்பில் தாமதத்திற்கு காரணம் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறுக்குப் பாதை அமைப்பதற்கான பணத்தை நடிகர் ச‌ங்கம் கட்டியது. 2005-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. அடுத்த மாதம் மண்டப வேலைகளை ஆரம்பித்து நான்கே மாத‌ங்களில் வேலைகள் முழுமையடையும் என்று பூமி பூஜையின் போது உறுதியளித்தார், அன்றைய நடிகர் ச‌ங்க‌‌த் தலைவர் விஜயகாந்த்.

நான்கு மாத‌ங்கள் கடந்து நான்கு வருட‌ங்கள் நிறைவடையப் போகிறது. மணிமண்டபத்துக்காக சின்ன செ‌ங்கல்கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை. ஆரம்பத்தில் எழுந்த சின்னச் சின்ன சல சலப்புகள்கூட தற்போது அட‌ங்கிவிட்டன. பிறந்தநாளின் போதும், இறந்த நாளின் போதும் சிவாஜியின் ரசிகர்கள் மணிமண்டபம் குறித்து பேசுவதோடு ச‌ரி. அரசோ, கலைத்துறையோ இது குறித்து கவலைப்படுவதாக இல்லை.

webdunia
webdunia photoFILE
சிவா‌ஜி கணேசன் தமிழ் சமூகத்திற்கு ஒரு நடிகர் மட்டுமல்ல. அவர் ஓர் இனத்தின் கலாச்சார வெளிப்பாடு. அப்பரையும், வ.உ.சி.யையும் அவர் மூலமாகவே பாமர தமிழர்கள் அறிந்து கொண்டார்கள். கர்ணனும், கட்டப்பொம்மனும் அவர் வடிவில்தான் இன்றும் தமிழ் மன‌ங்களில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

அ‌ங்கீகாரத்தைப் பொறுத்தவரை மோசமாக புறக்கணிக்கப்பட்ட இந்திய கலை‌ஞர்களில் அவரும் ஒருவர். சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு வழ‌ங்கப்பட்டதில்லை. கலைத்துறையின் உய‌ரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ப‌ரிந்துரைக்குப் பிறகே அவரை வந்தடைந்தது.

போகட்டும். அது இந்திய அரசு வழ‌ங்கும் விருது. மணிமண்டபமாவது ப‌ரிந்துரையோ, கோ‌ரிக்கையோ இல்லாமல் உருவாகிட தமிழக அரசும், கலைத்துறையும் முன்வர வேண்டாமா?அதுதானே அந்த மகா கலைஞனுக்கு பெருமை?

சிவா‌ஜி கணேசன் குறித்த அனைத்து விஷய‌ங்களுடன் அவரது மணிமண்டபம் ஒரு அரு‌ங்காட்சியமாக விள‌ங்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்.

சினிமா குறித்த புத்தக‌ங்கள், திரைப்பட‌ங்கள், அது பற்றிய ஆவண‌ங்கள் என மக்களுக்கு பயன்தரும் வகையில் மணிமண்டபம் அமைய வேண்டும் என்பது அவரது விருப்பம். இதற்கான பணத்தை அள்ளி வழ‌ங்க உலகம் முழுவதும் உள்ள சிவாஜியின் ரசிகர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

த‌ங்களது குடும்பம் சார்பாக ஒரு கோடி தரவும் அவர் தயார். மணிமண்டபத்திற்காக தமிழக அரசோ, கலைத்துறையோ ஒரு காசு செலவழிக்க அவசியமில்லை.

இவை அனைத்தும் தெ‌ளிவாக்கப்பட்ட பிறகும் மணிமண்டபம் இன்னும் கனவாகவே இருக்கிறது. அரசும், கலைத்துறையும் இதில் காட்டும் மௌனம் பு‌ரிந்து கொள்ள முடியாதது.

வருடத்திற்கு ஒருமுறை கொடை கொடுக்கும் பத்து நாட்கள் மட்டும் நினைவுகூரப்படும் சிறுதெய்வமாகி விட்டாரா சிவாஜி கணேசனும்? மணிமண்டப விஷயத்தில் காட்டப்படும் மெத்தனம் அப்படித்தான் எண்ண வைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil