இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், அவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும் நேற்று தமிழ் திரையுலகினர் ராமேஸ்வரத்தில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தினர்.
மதியம் 2.30 மணிக்கு ராமேஸ்வரம் தமிழ்நாடு ஹோட்டல் அருகிலிருந்து பேரணி புறப்பட்டது. பாரதிராஜா பேரணியை தொடங்கி வைத்தார். தமிழ் திரையுலகை சேர்ந்த ஏறக்குறைய அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்,விநியோகஸ்தர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பெப்ஸி தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திரையுலகினரும், பொது மக்களும் கலந்து கொண்ட இந்த பேரணி சுமார் முன்றரை கிலோ மீட்டர்களை கடந்து 4.15 மணிக்கு ஆத்திக்காடு மைதானத்தை வந்தடைந்தது.; பேரணியின் போது சிலர் இலங்கை அதிபர் ராஜ பக்சேயின் உருவ பொம்மையை எரித்ததால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
பேரணி முடிவில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அனல் கக்கிய திரையுலகினரின் பேச்சு கடல் அலைகூட கனன்று போயிருக்கும். அந்தளவு சூடாக இருந்தது திரையுலகினரின் நேற்றைய பேச்சு. ஒப்பனை உலகில் இத்தனை நிஜமான முகங்களா என வியக்காதவர்கள் இல்லை. விட்டால் கடல் கடந்து எதிரியின் தலையை கொய்யவும் தயாராக இருந்தனர் அனைவரும். அரிதாரம் பூசும் முகங்கள் அதிகம் இல்லாததால் பாரதிராஜா குறிப்பிட்டது போல் தீர்க்கமாகவும் அப்பழுக்கு இல்லாமலும் இருந்தது பொதுக் கூட்டம்.
சீமானின் பேச்சில் வியந்துபோன பாரதிராஜா, சீமானின் பேச்சை மட்டும் உங்கள் மனங்களில் எடுத்து செல்லுங்கள் என்றார். ராமேஸ்வரம் ரொம்ப தூரம் என பொதுக்கூட்டத்துக்கு வர மறுத்த நடிகர் சங்கத்தை தனது பேச்சில் கடுமையாக கண்டித்தார் பாரதிராஜா.
வடிவேலு பேசும் போது, நடிகர்கள் பற்றி பேச வேண்டாம், அது நமது நோக்கத்தை திசைதிருப்பும் என்றார். வீட்டில் தெலுங்கில் பேசிவிட்டு வெளியில் தமிழனாக நாடகம் போடுவதாக அவர் விஜயகாந்தை இடித்துரைத்தார். ஈழத்தமிழர் பற்றிய சி.டி. ஒன்றை பார்த்ததாகவும் அது தன்னை தூங்க விடாமல் செய்ததாகவும் தெரிவித்தார் அவர்.
இன்று கூட்டம் போடுவதுடன் நின்று விடாமல் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் சேரன். அமீரின் பேச்சில் வழக்கம் போல் சூடு. இலங்கைக்கு ராணுவ உதவி செய்துவரும் மன்மோகன் அரசை வன்மையாக கண்டித்தவர், பெருந்தன்மையுடன் நடப்பதுபோல் காட்டிவிட்டு மறுபக்கம் ஈழத் தமிழர்களை அழிவுக்கு கையளிப்பதாக சோனியா காந்தியை குற்றம்சாட்டினார்.
சீமானின் பேச்சு பிரச்சனையிலிருந்து சிறிதுகூட விலகாமல் துல்லியமாக இருந்தது. இறையாண்மை என்பதை இலங்கை அரசிடம் இல்லை என்பதை விவரித்தவர், இலங்கையின் இறையாண்மை பற்றி கவலைப்படுகிறவன்தான் நமது முதல் எதிரி என்றார்.
துப்பாக்கி ஏந்தி போராடிய பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ், ஹோசிமின், சேங்குவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்றவர்களை புரட்சியாளர்களாக கொண்டாடுகிறவர்கள் அதே துப்பாக்கியை ஏந்தி போராடும் விடுதலை புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். நேற்றைய பொதுக்கூட்டத்தில் அவர் எழுப்பிய கேள்விகளை ஒருவர் சிக்தனை செய்தாலே ஈழத் தமிழர் மீதான இன அழிப்பு தீவிரவாதத்துக்கு விடிவு கிடைக்கும்.