கார்ப்பரேட் கம்பெனிகளின் வரவு நல்லதா, கெட்டதா என்ற பட்டிமன்றம் ஓயப்போவதில்லை. இந்த வரவு நன்மையை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் செல்வதாகவே புதிதாக வரும் செய்திகள் கூறுகின்றன.
படங்களை வாங்கி வினியோகித்துக் கொண்டிருந்த பிரமிட் சாய்மீரா நிறுவனம் நேரடி படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது. அத்துடன் தமிழ்நாடு முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளை குத்தகைக்கு எடுத்துள்ளது.
தனது வியாபாரத்தை விரிவுபடுத்தும் பொருட்டு இலங்கையிலும் திரையரங்குகளை வாடகைக்கு எடுக்க உள்ளது பிரமிட் சாய்மீரா. இது இலங்கையில் தமிழ் சினிமாவுக்கான வர்த்தகத்தை துரிதப்படுத்தும்.
படத்தயாரிப்பில் கவனம் செலுத்தும் அட்லேப்ஸ் நிறுவனம், செளந்தர்யாவின் ஆஸ்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து 'சுல்தான் தி வாரியர்' படத்தைத் தயாரிப்பது தெரியும்.
இந்நிறுவனம் விரைவில் மதுரை மாநகரில் டிஜிட்டல் ஸ்டுடியோ ஒன்றை அமைக்கவுள்ளது. மதுரையில் ஐ.டி. பார்க் வரவுள்ளதால் தொலைநோக்குப் பார்வையுடன் மதுரையைத் தேர்வு செய்துள்ளது அட்லேப்ஸ்.
இதேபோல இன்னொரு நிறுவனம் பிலிம் சிட்டியை குத்தகைக்கு எடுத்து அதனைத் தூசு தட்டி ஹை டெக்காக மாற்ற முதல்வரை அணுகியுள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் சினிமா ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்ந்தால் ஆச்சர்யப்படாதீர்கள்!